உள்ளாட்சித் தேர்தலை இனியும் தாமதிக்காமல் உடனடியாக நடத்த வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு மேலும் மூன்று மாதங்கள் கால அவகாசம் வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் மனுத்தாக்கல் செய்திருப்பதற்கு திமுக சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். 


மே மாதத்திற்குள் தேர்தலை நடத்த வேண்டும் என உத்தரவிட்டிருந்த நிலையில் கெடு முடியும் வரை அமைதியாக இருந்துவிட்டு கடைசி நேரத்தில் கால அவகாசம் கேட்பது ஜனநாயகத்தை  ஈவு இரக்கமின்றி படுகொலை செய்யும் செயல் என  குற்றம் சாட்டியுள்ளார். தோல்வி பயத்தில்  உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல், திட்டமிட்டு, உள்நோக்கத்துடன் அதிமுக ஆட்சி  காலதாமதம் செய்துகொண்டிருக்கிறது எனவும் அவர் விமர்சித்துள்ளார். 
 
ஜனநாயகத்தைப் படுகுழியில் தள்ளும் முயற்சிகளை அதிமுக ஆட்சியும், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையமும் உடனடியாகக் கைவிட்டு, மக்களின் குறைகள் தீர்க்கும் நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்குவதற்குத் தேவையான உள்ளாட்சித் தேர்தலை இனியும் காலதாமதம் இன்றி நடத்திட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.