சட்டமீறல் அநியாயத்திற்குத் துணை போகிறார் தமிழக முதல்வர் :ஸ்டாலின் கண்டனம்
30 வருடங்களுக்கு மேலாக அரசு நிலத்தை ஆக்கிரமித்து சட்டவிரோத செயல்பட்டு வரும் சாஸ்திரா பல்கலைக்கழகத்துக்கு முதலமைச்சரும், தலைமைச் செயலாளரும் துணை போயிருக்கிறார்கள் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
30 வருடங்களுக்கு மேலாக அரசு நிலத்தை ஆக்கிரமித்து சட்டவிரோத செயல்பட்டு வரும் சாஸ்திரா பல்கலைக்கழகத்துக்கு முதலமைச்சரும், தலைமைச் செயலாளரும் துணை போயிருக்கிறார்கள் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
அதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
“தஞ்சாவூரில் திறந்த வெளி சிறைச்சாலை அமைக்க ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த 58.17 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்துள்ள சாஸ்திரா பல்கலைக்கழகம் அக்டோபர் மூன்றாம் தேதிக்குள் அங்கிருந்து வெளியேற வேண்டும்” என்று தஞ்சாவூர் தாசில்தார் நோட்டீஸ் அனுப்பியும், இன்றுவரை நில ஆக்கிரமிப்பை அகற்றிக்கொள்ளவும், ஆக்கிரமித்துக் கட்டியுள்ள 28 கட்டிடங்களை அப்புறப்படுத்தவும் நடவடிக்கை எதுவும் எடுக்காமல் இருக்கும் சாஸ்திரா பல்கலைக்கழகத்திற்கும், இந்த சட்டமீறல் அநியாயத்திற்குத் துணை போகும் முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிசாமிக்கும் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
30 வருடங்களுக்கும் மேலாக, அரசு நிலத்தை ஆக்கிரமித்துக் கொண்டுள்ளது மட்டுமின்றி, உயர்நீதிமன்றத்தின் மூன்றாவது நீதிபதி அளித்த தீர்ப்பையும் மதிக்காமல், பல்வேறு நிலைகளில் முறையீடுகளை செய்தும் “அரசு நிலத்தைத் தக்க வைத்துக் கொள்ளும் பேராசை - அராஜக மனப்பான்மையுடன்” ஒரு பல்கலைக்கழகம் நடந்து கொள்வதும், அதற்கு அதிமுக அரசில் உள்ள முதலமைச்சர், வருவாய்த் துறை அமைச்சர், தலைமைச் செயலாளர் ஆகியோர் துணை போவதும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையே செயலிழக்கச் செய்து, எள்ளி நகையாடுவது போல் அமைந்திருக்கிறது.
மூன்றாவது நீதிபதி மாண்புமிகு நீதியரசர் சி.வி. கார்த்திகேயன் அவர்கள், “ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தில் இருந்து கல்வி போதிப்பது அந்தக் கல்வியின் ஒழுக்கத்தையும், மதிப்பையும் கெடுத்து விடும்” என்றும், “30 வருடங்களுக்கு மேலாக சிங்கிள் நயா பைசா கூட கொடுக்காமல் அரசு நிலத்தை பல்கலைக்கழகம் பயன்படுத்தியுள்ளது” என்றும் கன்னத்தில் அறைந்தாற்போல கடும் எச்சரிக்கை செய்த பிறகும், மாணவர்களுக்கு ஒழுக்கம் கற்றுத் தரும் ஒரு பல்கலைக்கழகமே இப்படி சுய ஒழுக்கமின்றி, உயர்நீதிமன்றத் தீர்ப்பையே துச்சமென மதித்து உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தது.
அந்த முறையீடு கடந்த 14.09.2018 அன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, சாஸ்திரா பல்கலைக்கழகத்தின் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் திரு ஹரிஸ் சால்வே மற்றும் முகுல் ரோத்தகி ஆகியோர் ஆஜரான நிலையில், தமிழக அரசின் சார்பில் ஒரு வழக்கறிஞர் கூட ஆஜராகவில்லை.
முதலமைச்சரும், தலைமைச் செயலாளரும் அந்த அளவிற்கு சாஸ்திரா பல்கலைக் கழகத்தின் சட்டவிரோத ஆக்கிரமிப்பிற்குத் துணை போயிருக்கிறார்கள். வருவாய்த் துறை அமைச்சரோ சைக்கிள் பேரணி விடுவதிலும் வாய்நீளம் காட்டுவதிலும் காலத்தைப் போக்கினாரே தவிர, உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த ஒரு முக்கிய வழக்கில், தெரிந்தே வேண்டுமென்றே வழக்கறிஞரை ஆஜராக வைக்க எந்த முயற்சியும் செய்யவில்லை. அதிமுக அரசின் அத்தனை சதிகளையும் முறியடித்து அம்பலப்படுத்திடும் வகையில், “சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பில் தலையிட முடியாது” என்று உச்சநீதிமன்ற நீதிபதிகளே தீர்ப்பளித்து விட்டார்கள்.
அதன்பிறகு வேறு வழியின்றி ஒரு “எவிக்சன் நோட்டீஸ்” சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகத்திற்கு அளிக்கப்பட்டாலும், அக்டோபர் மூன்றாம் தேதிக்குள் இடத்தைக் காலி செய்து அரசு வசம் ஒப்படைக்கும் எந்த முன்னேற்பாடுகளிலும் சாஸ்திரா பல்கலைக்கழகமும் ஈடுபடவில்லை; அதிமுக அரசும் அதுபற்றிக் கண்டு கொள்ளாமல் கண்களைப் பொத்திக்கொண்டு இருக்கிறது.
ஆக்கிரமித்த அரசு நிலத்தை காலி செய்யாமல் மாண்புமிகு ஆளுநர் மாளிகைக்கு சாஸ்திரா பல்கலைக்கழகத் துணை வேந்தர் போய் வந்திருப்பதாகவும், அவருக்கு ஆதரவாக பா.ஜ.க. வினரும், சங் பரிவார அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் சந்தித்துக் கொண்டிருப்பதாக “சமூக வலைதளங்களில்” வெளிவரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது. அக்டோபர் மூன்றாம் தேதிக்குள் ஆக்கிரமித்த நிலங்கள் மற்றும் அங்கு கட்டியுள்ள கட்டிடங்களில் இருந்து வெளியேற வேண்டும் என்ற தஞ்சாவூர் தாசில்தாரின் நோட்டீஸ் என்ன ஆகப் போகிறது என்ற கேள்வி பெரிதாக எழத் துவங்கியுள்ளது.
சாலையோரங்களில் குடியிருக்கும் ஏழைகளை காலி பண்ணவும், சேலம் எட்டு வழி சாலைத் திட்டத்திற்கு விவசாயிகளின் சொந்த நிலங்களைப் பறிக்கவும் காவல்துறையை ஏவி விட்ட அதிமுக அரசு, உச்சநீதிமன்றமே இறுதித் தீர்ப்பை அளித்து விட்ட பிறகும், சாஸ்திரா பல்கலைக்கழகம் ஆக்கிரமித்துள்ள கட்டிடங்களை, நிலங்களை பறிமுதல் செய்ய காவல்துறை மூலம் இதுவரை நடவடிக்கை எடுக்காமல் செயலற்று இருப்பது ஏன்? சாஸ்திரா பல்கலைக்கழகத்தின் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று தடுப்பது யார்?
தலைமைச் செயலாளராக இருக்கும் திருமதி கிரிஜா வைத்தியநாதன் அவர்கள் துவக்கத்திலிருந்தே சாஸ்திரா பல்கலைக்கழக விவகாரத்தில் மற்ற ஆக்கிரமிப்பாளர்களிடம் காட்டும் அதிகாரத்தை, சாஸ்திரா பல்கலைக்கழகத்திடம் காட்ட மறுப்பது ஏன்? அதுவும் 58 ஏக்கருக்கும் மேற்பட்ட அரசு நிலத்தை மீட்க அவர் சட்டப்படி அக்கறை காட்டாதது ஏன்? என்ற கேள்விகள் எல்லாம் அடுக்கடுக்காக எழுகின்றன.
ஆகவே, இனியும் காலதாமதம் செய்யாமல் தஞ்சாவூர் சாஸ்திரா பல்கலைக்கழகம் ஆக்கிரமித்துள்ள 58 ஏக்கர் நிலத்தை உடனடியாகக் கைப்பற்றி, திறந்த வெளி சிறைச்சாலை அமைக்கும் பணிகளை துவங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
தலைமைச் செயலாளரோ, அதிமுக அரசோ உச்சநீதிமன்றம் அளித்துள்ள இறுதித் தீர்ப்பின் படி, அக்டோபர் மூன்றாம் தேதிக்குள் சாஸ்திரா பல்கலைக்கழகம் அரசு நிலங்களில் இருந்து வெளியேறுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும், எந்த திக்கிலிருந்து வரும் எவ்வித திரைமறைவு அழுத்தத்திற்கும் அடிபணியாமல், சட்டப்படி தீர்ப்பினை நிறைவேற்றி, அரசு நிலத்தையும் பொதுநலனையும் பாதுகாத்திட முன்வர வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு ஸ்டாலின் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.