ஸ்டாலின் தீர்மானித்து விட்டால் அதிமுக ஆட்சியே இருக்காது
திமுக எம்.எல்.ஏ., டி.ஆர்.பி.ராஜா அவர்கள் அதிமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப ஸ்டாலின் தீர்மானித்து விட்டால், ஒரு நிமிடம் கூட அதிமுக ஆட்சி தொடர முடியாது என கூறியுள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கை கூறியதாவது:-
டி.டி.வி தினகரனின் அறிக்கையை பார்த்ததும் அப்பழுக்கற்ற, அரசியல் நேர்மைக்கு இலக்கணமாகத் திகழும் தளபதியைப் பார்த்து இவர் விமர்சிப்பது விரக்தியின் விளிம்பில் நிற்பவரின் புலம்பல் போல் இருக்கிறது. இப்போதுள்ள அரசு “குற்றவாளி வழிகாட்டும் அரசுதான்” என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். அதை தாங்கிக் கொள்ள முடியாமல் அறிக்கை வெளியிட்டுள்ள டி.டி.வி. தினகரனைப் பார்த்து உள்ளபடியே பரிதாபப்படுகிறேன்.
இந்த அரசு குற்றவாளிகளின் வழி காட்டுதலில் செயல்படும் “பினாமி அரசு” என்று தளபதி மட்டுமல்ல இன்றைக்கு ஏழரை கோடி தமிழர்களும் குற்றம் சாட்டுவதை “பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருண்டு விட்டது”என்று இவர் கருதுவது போல் தெரிகிறது.
குடியுரிமையிலேயே பொய் சொல்லி “பெராவில் 28 கோடி ரூபாய் அபராதம் செலுத்த உயர்நீதிமன்றமே” உத்தரவிட்ட பிறகு டி.டி.வி. தினகரனை எப்படி அழைப்பது? பெரா பெனால்டிக்குரியவரை உத்தமர் என்றா அழைக்க முடியும்? இன்றைய நிலையில் நீங்கள் குறிப்பிடும் “ஓ.பி.எஸ்” அணி அல்ல- “இ.பி.எஸ்” அணி கூட உங்களை உத்தமர் என்று கூறமாட்டார்களே?
“முகத்திரை” போட்டுக் கொண்டோ “முக்காடு” போட்டுக் கொண்டோ இனியும் அதிமுக தொண்டர்களை ஏமாற்ற முடியாது என்பது இன்று “ஓ.பி.எஸ். அணி” நடத்திய உண்ணாவிரதத்தில் பகிரங்கமாகத் தெரிந்து விட்டதால், அத்துமீறி நுழைந்து இருக்கின்ற போயஸ் தோட்டமும் பறிபோய் விடுமோ என்ற பீதியில் டி.டி.வி.தினகரன் தளபதியைப் பார்த்து அறிக்கை ஒன்றை எழுதச் சொல்லி வெளியிட்டுள்ளார்.
ஓ.பி.எஸ். அணியின் குற்றச்சாட்டிற்கு பதில் சொல்ல வக்கற்ற டி.டி.வி.தினகரன் “நானும் அரசியல்வாதிதான்” என்று அடாவடியாக அதிமுக-வினரை மிரட்டலாம். “எடுபிடிகளாக” கை கட்டி நிற்கும் நிர்வாகிகளை அச்சுறுத்தலாம்.
ஆனால் எங்கள் தளபதியையோ- ஏன் திமுக -வில் உள்ள அடிமட்ட தொண்டனிடம் கூட உங்கள் ஜம்பம் பலிக்காது என்பதை புரிந்து கொள்ள இன்னும் குறைந்தது இருபது ஆண்டுகளாவது தமிழக அரசியல் பற்றி நீங்கள் “பாலபாடம்” கற்க வேண்டும்.
தேர்தல் ஆணையத்தால் “அனாமதேயம்” என்று அறிவிக்கப்பட்டு விட்ட உங்களுக்கு தளபதி பற்றி கூறுவதற்கு என்ன அருகதை இருக்கிறது. உங்கள் கையில் ஜெயலலிதாவின் சொத்துக்களும், எம்.ஜி.ஆர் வளர்த்த அதிமுக -வும் மாட்டிக் கொண்டு சின்னா பின்னமாகிறதே என்ற வருத்தம்தான் என் போன்றோருக்கு வருகிறது.
இன்றைய நிலையில் அதிமுக -விற்குள் யாரும் டி.டி.வி. தினகரனை மதிப்பதில்லை. விரைவில் தேர்தல் கமிஷன் அங்கீகாரம் செய்யாத துணைப் பொதுச்செயலாளர் பதவியும் பறிபோகப் போகிறது.
போயஸ் தோட்டத்திலிருந்தும் வெளியேற வேண்டிய நிலையும் வரப்போகிறது என்ற ஆத்திரத்திலும், ஆதங்கத்திலும் “தளபதி பற்றி விமர்சித்து” தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளடி.டி.வி. தினகரன் முயலுகிறார். அது பகல் கனவு. பலிக்காது. தளபதி எந்த பதவிக்கும் நேரடியாக மக்களை சந்தித்தே வந்திருக்கிறார் என்ற குறைந்த பட்ச அரசியல் அறிவைக்கூட நீங்கள் இழந்தது ஏன்?அரசியல் பண்பாடு போன்றவற்றை மனதில் வைத்து தளபதி அமைதியாக இருக்கிறார்.
ஆகவே, எங்கள் தளபதியை வீணாக சீண்ட வேண்டாம். மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப “குற்றவாளி” பினாமியின் ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப தளபதி தீர்மானித்து விட்டால் ஒரு நிமிடம் கூட “குற்றவாளி”கள் வழிகாட்டும் அதிமுக ஆட்சி தமிழகத்தில் தொடர முடியாது என்பதை மட்டும் நன்கு ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று டி.டி.வி. தினகரனை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.