DMK தேர்தல் அறிக்கை ஹீரோ; BJP தேர்தல் அறிக்கை வெறும் ஜீரோ: MKS
திமுகவின் தேர்தல் அறிக்கை ஹீரோ என்றும், காங்கிரசின் தேர்தல் அறிக்கை சூப்பர் ஹீரோ, ஆனால் பாஜகவின் தேர்தல் அறிக்கை வெறும் ஜீரோ என ஸ்டாலின் விமர்சனம்!!
திமுகவின் தேர்தல் அறிக்கை ஹீரோ என்றும், காங்கிரசின் தேர்தல் அறிக்கை சூப்பர் ஹீரோ, ஆனால் பாஜகவின் தேர்தல் அறிக்கை வெறும் ஜீரோ என ஸ்டாலின் விமர்சனம்!!
கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதி தொடங்கிய மக்களவை தேர்தல் இந்த மாதம் மே 19 ஆம் தேதி வரை மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதுவரை 4 கட்டங்களுக்கான வாக்குப்பதிவு முடிந்துள்ளது. தமிழகத்தை பொறுத்த வரை கடந்த 18 ஆம் தேதி மொத்தமுள்ள 39 தொகுதிகளில் 38 நாடாளுமன்ற தொகுதிக்கு மக்களவை தேர்தலும், 18 சட்டப்பேரவை தொகுதிக்கு இடைத்தேர்தலும் நடந்து முடிந்தது. சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டபேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் இந்த மாதம் 19 ஆம் தேதி நடைபெற இருக்கின்றன.
திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதி தி.மு.க. வேட்பாளர் டாக்டர் சரவணனை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள தி.மு.க. தலைவர் ஸ்டாலின் திருப்பரங்குன்றத்தை அடுத்த நிலையூரில் நெசவாளர்கள் வசிக்கும் பகுதிகளுக்குச் சென்று வாக்குச் சேகரித்தார். அப்போது அவர் தறி நெய்யும் பணியில் ஈடுபட்டார்
இதனைத் தொடர்ந்து திண்ணைப் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர் நெசவாளர்கள் மத்தியில் பேசியபோது சவுராஷ்டிரா மொழியில் வணக்கம் தெரிவித்து பேச்சைத் தொடங்கினார். பெருவாரியான ஊராட்சிகளுக்குச் சென்ற ஒரே தலைவன் தான் தான் என்று தெரிவித்த அவர், வெறும் தேர்தலுக்கு வந்தார், வாக்குறுதிகள் தந்தார் என்ற போக்கில் இல்லாமல் சொன்னதைச் செய்வோம், செய்வதைச் சொல்வோம் என்ற வகையில் தி.மு.க.வின் செயல்பாடுகள் அமையும் என்று தெரிவித்தார்.
மேலும், திமுகவின் தேர்தல் அறிக்கை ஹீரோ என்றும், காங்கிரசின் தேர்தல் அறிக்கை சூப்பர் ஹீரோ என்றும் கூறிய மு.க.ஸ்டாலின் பாஜகவின் தேர்தல் அறிக்கை வெறும் ஜீரோ என்று விமர்சனம் செய்தார். விவசாயிகளுக்காகவும், பெண்களுக்காகவும் பல்வேறு திட்டங்களை திமுக தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும் இடஒதுக்கீட்டுக்காக போராடிய கருணாநிதிக்கு கடைசியில் இடம் கேட்டுப் போராட வேண்டிய நிலை வந்ததாகவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.