புதுடெல்லி: நேற்று முன்தினம் இரவு சென்னை மெரினாவில் மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் சமாதிக்கு சென்று 40 நிமிடங்கள் தியானம் செய்த முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்ததில் தமிழகத்தில் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அபோது அவர் தான் அவமானப்படுத்தப்பட்டதாகவும், தன்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா கடிதத்தை வாங்கியதாகவும் தெரிவித்தார். தமிழக மக்களுக்காக தன்னந்தனியாக இருந்து போராடுவேன் என்றும் கூறினார். மக்கள் விரும்பினால் ராஜினாமாவை வாபஸ் பெறுவேன் என்றும் அப்போது அவர் தெரிவித்தார். 


இதைத்தொடர்ந்து, சசிகலா நள்ளிரவில் அமைச்சர்கள் கூட்டத்தை கூட்டி அவசர ஆலோசனை நடத்தினார். பின்னர் அதிமுக பொருளாளர் பதவியிலிருந்து ஓ. பன்னீர்செல்வத்தை அவர் நீக்கினார். ஓ. பன்னீர்செல்வத்துக்கு தற்போது வரை 5 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.


இத்தகைய பரபரப்பான சூழலில் இன்று மாலை கவர்னர் சென்னை வருகிறார். கவர்னரை சந்திக்க ஓ. பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா தரப்பு அனுமதி கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. 


இந்நிலையில், அதிமுகவின் பிரச்சினையில் திமுக தலையிடாது என்று திமுக எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார். ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்கு கனிமொழி அளித்த பேட்டி:- திமுக இது போன்ற பிரச்சினையில் தலையிடாது. இவை அனைத்தும்  அதிமுகவின் பிரச்சினை. இது மிகவும் மோசமானது. வருத்தம் அளிக்க கூடிய ஒன்று.


இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.