Sterlite ஆலையை திறக்க ADMK - BJP சேர்ந்து செயல்படுகிறது -ஸ்டாலின்
ஸ்டெர்லைட் ஆலை குறித்த மத்திய அரசின் நீர் ஆய்வு அறிக்கைக்கு எதிராக தமிழக அரசு வழக்கு தொடர வேண்டும் என மு.க.ஸ்டாலின் காட்டம்...!
ஸ்டெர்லைட் ஆலை குறித்த மத்திய அரசின் நீர் ஆய்வு அறிக்கைக்கு எதிராக தமிழக அரசு வழக்கு தொடர வேண்டும் என மு.க.ஸ்டாலின் காட்டம்...!
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து விசாரணை நடத்தி வரும் அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் விசாரணை ஆணையத்துக்கு தமிழக அரசு மேலும் 6 மாத கால அவகாசம் கொடுத்தது உத்தரவிட்டது.
இந்நிலையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு பா.ஜ.கவும் அ.தி.மு.க-வும் கைகோர்த்து செயல்பட்டு வருவது கண்டனத்துக்குரியது என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு பா.ஜ.கவும் அ.தி.மு.கவும் கைகோர்த்து செயல்பட்டு வருவது கண்டனத்துக்குரியது என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி 100 நாட்களாக அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வந்தனர். அதன் 100 வது நாள் போராட்டத்தில் கலவரம் நடந்ததால் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியானார்கள்.
தூத்துக்குடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுக்கு ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே காரணமில்லை” என்று மத்திய நீர்வளத்துறை, தன்னிச்சையாகத் தனது கட்டுப்பாட்டில் உள்ள நிலத்தடி நீர் வாரியத்தின் மூலம் ஒரு நிலத்தடி நீர் ஆய்வினை, தூத்துக்குடி பொதுமக்களின் மனநிலையை அறிந்து கொள்ளாமலும், தமிழக மக்களைக் கோபப்படுத்தும் வகையிலும், வெளியிட்டிருப்பதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டு, அது தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்திலும், உயர்நீதிமன்றத்திலும், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திலும் நிலுவையில் இருக்கும்போது தனியார் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக - அந்த ஆலையை திறப்பதற்கு துணை போகும் வகையில், இப்படியொரு ஆய்வை மேற்கொண்டிருப்பது தமிழக மக்களை வஞ்சிக்கும் செயலாகும். ஒரு தனியார் கார்ப்பரேட் ஆலைக்காக, ஏழரைக்கோடி மக்களின் நலனை, மத்திய பா.ஜ.க. அரசு தூக்கியெறிந்து செயல்பட்டு வருவது அதிர்ச்சியளிக்கிறது.
மத்திய நிலத்தடி நீர் வாரியம் தூத்துக்குடி பகுதிகளில் நீரினை ஆய்வு செய்யும் போது, உளவுத்துறை மூலமாக அறிந்திருந்தும், அதை வேடிக்கை பார்த்து விட்டு, இப்போது மத்திய அரசின் அறிக்கை வெளிவந்த பிறகு - ஏதோ தங்களுக்குத் தெரியாமல் ஆய்வு நடந்து விட்டது போல் ஒரு கபட நாடகத்தை அரங்கேற்றி, மாநில தலைமைச் செயலாளர் பெயரில் அந்த அறிக்கையை எதிர்க்க வைத்திருப்பது அ.தி.மு.க அரசுக்கும் - மத்திய பா.ஜ.க. அரசுக்கும் தனியார் ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதில், உள்நோக்கத்துடன் திரைமறைவுக் கூட்டணி வைத்துள்ளன என்பது தெரிகிறது.
ஏற்கனவே, அந்த தனியார் ஆலையை மூடக்கோரி ஜனநாயக முறையில் போராட்டம் நடத்திய அப்பாவி மக்களில் 13 பேரை கொடூரமான முறையில் சுட்டுக் கொன்றது அ.தி.மு.க அரசு. “அமைச்சரவையைக் கூட்டி, கொள்கை முடிவு எடுத்து ஸ்டெர்லைட் ஆலையை மூடுங்கள்” என்று உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியும் கூட, இந்த அரசு உயர்நீதிமன்றத்தின் அந்த அறிவுரையை மதிக்கவில்லை.
சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் “கொள்கை முடிவு எடுங்கள்” என்று கூறிய போது அதையும் நிராகரித்து விட்டது அ.தி.மு.க அரசு. தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் முறையாக இந்த வழக்கில் வாதங்களை எடுத்து வைக்காமல், “ஸ்டெர்லைட் ஆலையின் நிர்வாக அலுவலகத்தைத் திறப்பதற்கு” துணை போனது அ.தி.மு.க அரசு. தமிழகத்தில் எத்தனையோ மூத்த உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதியரசர்கள் இருந்தும், வெளி மாநிலத்திலிருந்து ஓய்வு பெற்ற ஒரு நீதிபதியை “ஆய்வு கமிட்டியின் தலைவராக” நியமிப்பதற்கு, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் இடமளித்து மவுனம் காத்தது தமிழ்நாடு அரசு.
ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய மாநில அரசின் பிரதிநிதிகளே இல்லாமல், ஒரு கமிட்டியை, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அமைப்பதையும் கைகட்டி நின்று வேடிக்கை பார்த்தது அ.தி.மு.க அரசு. இப்போது மத்திய அரசு நடத்திய “நீர் ஆய்வுக்கும்” உறுதுணையாக இருந்து விட்டு, திடீரென்று தலைமைச் செயலாளர் மூலமாக “எதிர்ப்புக் கடிதம்” எழுத வைத்திருப்பது, தூத்துக்குடி மக்களை மட்டுமல்ல - தமிழக மக்களை ஏமாற்றித் திசை திருப்பும் வேலை.
மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசும் - மாநில அ.தி.மு.க அரசும் ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதற்கு கைகோர்த்து “கடமை உணர்வுடன்” செயல்படுகின்றன என்பது உறுதியாகிறது.
ஆகவே, சுற்றுப்புறச்சூழலுக்கும், சட்டம் - ஒழுங்கு பிரச்சினைகளுக்கும் காரணமாக இருக்கும் ஸ்டெர்லைட் ஆலை குறித்த “அதிகாரத்துடன் ஆணவத்தையும் துணைக்கு அழைத்துக் கொண்டு” தயாரித்துள்ள ஒரு “நீர் ஆய்வு” அறிக்கையை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
அ.தி.மு.க அரசு இப்படி அதிகாரிகள் மூலம் கடிதம் எழுதி எதிர்ப்புத் தெரிவிப்பதை விடுத்து, உடனடியாக இந்த ஆய்வு அறிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து தடை பெற்றிட வேண்டும் என்றும்; அந்த அறிக்கையை அமைச்சரவைக் கூட்டத்தில் நிராகரித்திட வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி 100 நாட்களாக அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வந்தனர். அதன் 100 வது நாள் போராட்டத்தில் கலவரம் நடந்ததால் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது..!