SVe சேகரை கைது செய்யாமல் இருப்பது வியப்பளிக்கிறது -கனிமொழி!
பெண் பத்திரிக்கையாளர் ஒருவரை குறித்து அவதூறான கருத்தை முகநூலில் பதிவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து எஸ்.வி.சேகருக்கு எதிராக பத்திரிக்கையாளர் சங்கம் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
பெண் பத்திரிக்கையாளர் ஒருவரை குறித்து அவதூறான கருத்தை முகநூலில் பதிவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து எஸ்.வி.சேகருக்கு எதிராக பத்திரிக்கையாளர் சங்கம் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். போலீசாரால் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என்ற நிலையில் SVe சேகர் முன்ஜாமின் கோரி உயர்நீதிமன்றத்தில் கடந்த ஏப்., 23 அன்று மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, அவரது மனுவினை தள்ளுபடி செய்தார். இதன் பின்னரும் இதுவரை அவர் கைது செய்யப்படவில்லை. இதுகுறித்து தனது கண்டனத்தினை தெரிவித்து திமுக உறுப்பினர் கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ளதாவது...
"பெண் பத்திரிக்கையாளர்களை இழிவாக சித்தரித்து முகநூலில் பதிவிட்ட பிஜேபி உறுப்பினர் எஸ்வி.சேகரின் முன் ஜாமீன் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த பின்னும், காவல்துறை அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்காமல் இருப்பது வியப்பளிக்கிறது.
இழிவாக ஒரு பதிவு செய்துவிட்டு, பின்னர் அதை நீக்குவதும், வருத்தம் தெரிவிப்பதும் வழக்கமாகி வருகிறது. விமர்சனம் செய்ய அனைவருக்கும் கருத்து சுதந்திரம் உள்ளது, ஆனால் அவதூறு செய்ய அல்ல. காவல்துறை இவ்விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன்." என பதிவிட்டுள்ளார்.