"இரண்டாண்டுகளுக்கு முன் நடந்ததை மறந்துவிட்ட சகோதரி டாக்டர் தமிழிசை அவர்களுக்கு ‘செலக்டிவ் அம்னிஷியா’ வந்துவிட்டது" என திமுக MLA அன்பழகன் தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முன்னதாக எதிர் வரும் பாராளுமன்ற தேர்தலுக்கு தமிழகத்தில் கூட்டணி அமைத்திருக்கும் திமுக-காங்கிரஸ் கூட்டணி குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பதிவிட்டிருந்தார். அவரது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டு இருந்ததாவது.. 


"கலைஞர் உயிரோடிருந்தால்...இன்றுஸ்டாலின் அமைத்திருக்கும்  காங்கிரசுடனான கூட்டணியை அமைத்திருக்கமாட்டார்...ஏனென்றால் கூடாநட்பு கேடாய்முடியும் எனக்கூறியதும் அவர்தானே?" என குறிப்பிட்டு இருந்தார். இந்த பதிவிற்கு பதிலடி கொடுக்கும் விதமாக திமுக சட்டமன்ற உறுப்பினர் திரு அன்பழகன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது... 



"சகோதரி டாக்டர் தமிழிசை அவர்களுக்கு "செலக்டிவ் அம்னிஷியா". தலைவர் கலைஞர் சந்தித்த கடைசி தேர்தலான கடந்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் பேரியக்கத்தோடுதான் திமுக களம் கண்டது. இரண்டாண்டுகளுக்கு முன் நடந்ததை மறந்துவிட்டாரா? வசதியாக மறைக்கிறாரா?" என பதிவிட்டுள்ளார். 


தமிழக அரசியல் கட்சிகளுக்கு இடையே கூட்டணி காய்ச்சல் பிடித்துள்ள நிலையிலும், பாஜக- திமுக கட்சியினரிடையே அவ்வப்போது ஏற்பட்டு வரும் அரசியல் வாக்குவாதங்களுக்கு இடையில் தற்போது இருவரது பதிவு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.


முன்னதாக நேற்று சென்னைக்கு அருகில் பிரதமர் மோடி பங்கேற்ற கூட்டத்தில் திமுக கூட்டணியை சந்தர்ப்பவாதக் கூட்டணி என விமர்சித்தார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் நேற்று விருதுநகரில் நடைபெற்ற திமுக தென் மண்டல மாநாட்டில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் "குஜராத் மோடியா, தமிழகத்தின் லேடியா என அவருக்கு சவால் விட்டவர் ஜெயலலிதா. அப்படிப்பட்ட ஜெயலலிதா மீது மோடிக்கு திடீர் பாசம் வந்துள்ளது. 78 நாட்கள் அப்போலோவில் சிகிச்சை பெற்ற ஜெயலலிதாவை பார்க்க வராத மோடி, இப்போது மக்களவைத் தேர்தலுக்காக ஜெயலலிதாவை புகழ்ந்து பேசுகிறார். ஜெயலலிதா இல்லாத சந்தர்பத்தை பயன்படுத்திக்கொண்டு அதிமுக-வுடன் கூட்டணி வைக்கும் பாஜக சந்தர்பவாத கூட்டணியா, இல்லை திமுக சந்தர்பவாத கூட்டணியா என வரும் தேர்தலில் மக்கள் பதில் கூறுவர்" என பேசினார்.