தமிழகத்தில் 22 சட்டமன்ற தொகுதிகளுக்கு நடத்தப்பட்ட இடைத்தேர்தலில் 13 இடங்களில் திமுக-வினர் வெற்றி பெற்றனர். அவர்கள் சபாநாயகர் முன்னிலையில் இன்று பதவியேற்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் 22 சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 18 மற்றும் மே 19 ஆகிய தினங்களில் மக்களவை தேர்தலுடன் நடைப்பெற்ற இடைத்தேர்தலில் 13 இடங்களில் திமுக-வும், 9 இடங்களில் அதிமுக-வும் வெற்றி பெற்றன. இவர்கள் பெயர்கள் அரசிதழில் வெளியிடப்பட்டன.


இந்நிலையில், இன்று காலை எம்.எல்.ஏ.க்களாக பதவி ஏற்பதாக சட்டசபை செயலகத்திடம் திமுக தெரிவித்து இருந்தது. இதற்கு சபாநாயகர் ப.தனபால் அனுமதி அளித்திருந்தார்.



இதனைத்தொடர்ந்து திமுக சார்பில் வெற்றி பெற்ற 13 பேரும் சபாநாயகர் முன்னிலையில் எம்.எல்.ஏ.க்களாக இன்று பதவி ஏற்றனர்.  தலைமை செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை தலைவர் அறையில் தி.மு.க. சார்பில் வெற்றி பெற்ற 13 பேரும்  எம்.எல்.ஏ.க்களாக இன்று பதவி ஏற்றுக்கொண்டனர். 


அவர்களுக்கு சபாநாயகர் தனபால் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். இந்நிகழ்ச்சியில் எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின், மக்களவை திமுக குழு தலைவர் டி.ஆர்.பாலு, மூத்த தலைவர் கே.என்.நேரு உள்ளிட்டோர் உடனிருந்தனர். 


சட்டப்பேரவையில் திமுக சார்பில் 88 எம்எல்ஏக்கள் உள்ள நிலையில் தற்போது அந்த எண்ணிக்கை 101 ஆக அதிகரித்து பலம் வாய்ந்த எதிர்க்கட்சியாக திமுக உள்ளது. மேலும், அதிமுக சார்பில் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 9 பேரும் நாளை எம்எல்ஏக்களாக பதவியேற்க உள்ளனர்.


பதவியேற்ற திமுக எம்எல்ஏக்கள் விவரம்:


  • திருவாரூர் - பூண்டி கலைவாணன்

  • திருப்பரங்குன்றம் - டாக்டர் சரவணன்

  • அரவக்குறிச்சி - செந்தில் பாலாஜி

  • ஓசூர் - எஸ்.ஏ. சத்யா

  • ஆம்பூர் - வில்வநாதன்

  • குடியாத்தம் - காத்தவராயன்

  • ஓட்டப்பிடாரம் - சண்முகையா

  • பெரியகுளம் - சரவணக்குமார்

  • தஞ்சாவூர் - நீலமேகம்

  • ஆண்டிபட்டி - மகாராஜன்

  • பூந்தமல்லி - கிருஷ்ணசாமி

  • பெரம்பூர் - ஆர்.டி.சேகர்

  • திருப்போரூர் - இதயவர்மன்