சென்னை: மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப்பட்டியலை உடனடியாக வெளியிட்டு மாணவர்கள் விரைவில் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து மருத்துவக்கல்வி பயிலுவதற்கான ஆரோக்கியமான சூழ்நிலையை தமிழக அரசு உருவாக்கிட வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தேசிய கல்விக்கொள்கை தொடர்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார். அப்பொழுது அவர் உரையாற்றி பேசியது,


நீட் தேர்வு தமிழகத்தின் கடும் எதிர்ப்பையும் மீறி, மாநில உரிமைகளை எல்லாம் கொஞ்சம் கூட மதிக்காமல். சட்ட நடைமுறைகளுக்கு புறம்பாக வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்டிருக்கின்றது. மாணவியர்கள் அதனால் தற்கொலை செய்துகொள்ளக்கூடிய நிலைமையும் ஏற்பட்டிருக்கின்றது. அதுபோல், அந்த மாணவிகளைப் பெற்றெடுத்திருக்கக்கூடிய பெற்றோர்களினுடைய மன அழுத்தம் அது ஒரு பக்கம் இருந்துகொண்டிருக்கின்றது. 


நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விதிவிலக்கு அளிக்கவேண்டும் என்று இதே சட்டப் பேரவையில் 01-02-2017 அன்று ஏகமனதாக எல்லாக்கட்சிகளும் ஒருங்கிணைந்து ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பட்டிருக்கின்றது. இதனால் வரையில் 2 மசோதாக்கள் அனுப்பப்பட்டிருக்கின்றது. ஆனால், மத்திய அரசு இதுவரையில் அதற்குரிய ஒப்புதலைத் தரவில்லை. அது மத்திய அரசின் அலமாரியில் ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருக்கின்றது. தமிழக மாணவ, மாணவியர்களுடைய எதிர்கால நலனுக்கு எதிராக மத்தியரசு மேற்கொண்டிருக்கக்கூடிய இந்தப் பின்னணியில் 2019-20 ஆம் ஆண்டிற்கு மாணவ சேர்க்கைக்கான நீட் தேர்வு முடிவுகள் 05-6-2019 அன்று வெளியிடப்பட்டு விட்டது. அதன் அடிப்படையில் தரவரிசைப்பட்டியல் தயார் செய்யப்பட்டு இந்நேரம் வெளியிட்டிருக்க வேண்டும். ஆனா, இதனால் வரையில் தரவரிசைப்பட்டியல் வெளியிடப்படவில்லை. 


என்னைப்பொறுத்தவரையில் நான் சொல்ல விரும்புவது, இது திட்டமிட்டு தாமதப்படுத்துவதற்கு ஒரு சதி இருக்கின்றது என்பதைத்தான் புரிந்துகொள்ள முடிகின்றது. இதனால் மாணவ, மாணவியரும் பெற்றோர்களும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கின்றார்கள் என்பது மிகுந்த வேதனைக்குரிய ஒன்றாக அமைந்திருக்கின்றது.


முன்னேறிய வகுப்பினருக்காக அவசர அவசரமாக மத்திய அரசு அரசமைப்பு சட்டத்திற்கு புறம்பாக 10 சதவிகித இட ஒதுக்கீட்டை அறிவித்திருக்கின்றது. தமிழ்நாடு அரசு அதனை செயல்படுத்தினால் மருத்துவப்படிப்பில் 25 சதவிகித இடங்களை கூடுதலாக ஒதுக்க வேண்டும் என்ற செய்தியும் பரவலாக வந்துகொண்டிருக்கின்றது. சமூக நீதியின் தாயகத்தில் வாழக்கூடிய நம்முடைய நாக்கில் தேனைத்தடவி ஏமாற்ற நினைக்கின்றது மத்திய அரசு. 


25 சதவிகிதம் என்ற தூண்டிலை மத்திய அரசு நம்மீது வீசி அதில் நாம் சிக்கிக்கொள்கின்றோமா என்று பாத்துக்கொண்டிருக்கின்றது. அதில் ஒரு நோட்டம் பார்க்கின்றது. தமிழகத்தைப் பொறுத்தவரையில் ஏற்கனவே, பொதுப்பிரிவினருக்கான 31 சதவிகித இட ஒதுக்கீடில் நடைமுறையில் சிறப்பான முறையில் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றது. அதில் முன்னேறிய சாதியினர் உள்ளிட்ட திறமையுள்ள அனைத்து பிரிவினரும் போட்டியிட்டு தேர்ச்சி பெறுகின்றார்கள். 


நமது அரசு மருத்துவக்கல்லூரிகளில் கூட, இடங்களை அதிகரிக்க பல நிபந்தனைகளை விதித்து வழக்கமாக பல முட்டுக்கட்டைகளை போடக்கூடிய நிலையில் தான் மத்திய அரசு இருக்கின்றது. இப்பொழுது முன்னேறிய பிரிவினர் இட ஒதுக்கீட்டை செயல்படுத்துவதற்காக 25 சதவிகித இட ஒதுக்கீடு தருகின்றோம் என்று தாமாகவே ஒரு சுயநலத்தோடு முன்வந்து ஒரு தந்திரமான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டிருக்கின்றது என்பது தான் என்னுடைய குற்றச்சாட்டு.


மத்திய அரசின் கவச்சியிலும் மாநில அரசு மனம் பறிகொடுத்துவிடக்கூடாது என்பதுதான் என்னுடைய கோரிக்கை. அதுமட்டுமல்ல சமூக நீதி காத்த வீராங்கனை என்ற பட்டத்தை முன்னாள் முதல்வர் அம்மையார் ஜெயலலிதா அவர்கள் என்று நாம் சொல்லியிருக்கின்றோம். அதனை நீங்களும் பெருமையோடு பேசிக்கொண்டிருக்கின்றீர்கள். அந்த அடிச்சுவட்டில் தான் இப்பொழுது ஆட்சி நடந்துகொண்டிருக்கின்றது என்று சொல்கின்றீர்கள். அதனால், நான் கேட்க விரும்புவது 25 சதவிகித கவர்ச்சி வலையில் நாம் விழுந்துவிடக்கூடாது. 


ஆகவே, முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு குறித்து, இந்த அரசின் நிலைப்பாடு என்ன? உங்களுடைய கொள்கை என்ன? என்பதை மேலும் தாமதம் செய்துகொண்டிருக்காமல் ஒரு ஆபத்தான கட்டத்தை நோக்கி போய்க்கொண்டிருக்கின்றோம். 69 சதவிகித இட ஒதுக்கீட்டில் எந்த வித சமரசத்திற்கும் இடமில்லை என்ற நிலைப்பாட்டில், இந்த அரசு அசையாமல் உறுதியாக நிற்க வேண்டும் என்பதைத் தான் திராவிட முன்னேற்றக் கழகம் இன்றைக்கு எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது. 


உங்களை நான் கேட்டுக்கொள்ள விரும்புவது உடனே இதனைத் தெளிவுபடுத்தி, மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப்பட்டியலை உடனடியாக வெளியிட்டு மாணவர்கள் விரைவில் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து மருத்துவக்கல்வி பயிலுவதற்கான ஆரோக்கியமான சூழ்நிலையை உருவாக்கிடவேண்டும் என்று கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன். 


அதுமட்டுமல்ல, நான் இன்னும் இந்த அரசை கேட்டுக்கொள்ள விரும்புவது, உடனடியாக தமிழகத்தில் இருக்கக்கூடிய அங்கீரகரிக்கப்பட்டிருக்கக்கூடிய அனைத்துக்கட்சி கூட்டத்தையும் கூட்டி அதில் விவாதித்து அதன் மூலமாக ஒரு நல்ல முடிவு எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.


இவ்வாறு உரையாற்றினார்.