தமிழகத்தில் நடைபெற்று வரும் ஊழலை கண்டித்து திமுக சார்பில் மாநிலம் முழுவதும் உள்ள மாவட்டத் தலைநகரங்களில் இன்று காலை முதல் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இந்த ஆர்ப்பாட்டங்களில் ஏராளமான தி.மு.க. தொண்டர்கள் பங்கேற்று அ.தி.மு.க. அரசுக்கு எதிராக கண்டன கோ‌ஷங்களையும் முழக்கங்களையும் எழுப்பி வருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதன் ஒருபகுதியாக சேலத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமை தாங்கினார். அங்கு அமைக்கப்பட்டு இருந்த மேடையில் பேசிய ஸ்டாலின், தமிழகத்தில் அதிமுக அரசுக்கு மக்கள் மீது எந்தவித அக்கறையும் இல்லை. தங்களுக்கு தேவையான சொத்துக்களை சேர்ப்பதில் மட்டும் கவனம் செலுத்தி வருகின்றனர். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக ஊழலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசை விரைவில் தூக்கி எறியவேண்டும். அதற்கான முன்னோட்டமாக தான் தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.


 



மேலும் நீயா? நானா? என போட்டி போட்டுக்கொண்டு ஊழல் செய்யும் ஊழல் பேர்வழிகளான முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் அவர்களுடைய உறவினர்கள், பினாமிகள், இதற்குத் துணை போய்க் கொண்டிருக்கும் அதிகாரிகள் என அனைவரும் திமுக ஆட்சி அமைந்தவுடன் சிறைக்குச் செல்வார்கள் என்பது உறுதி எனவும் கூறினார்.


தி.மு.க தலைவராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் முதல் ஆர்ப்பாட்டம் என்பது குறிப்பிடதக்கது.