சபரிமலை விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு குறித்து எம்.பி கனிமொழி கருத்து
சபரிமலை தீர்ப்பை போல பெண்களுக்கான இட ஒதுக்கீடு பற்றியும் பாராளுமன்றமும், சட்டமன்றங்களும் பரிசீலனை செய்ய வேண்டும் என திமுக ராஜ்யசபா எம்.பி கனிமொழி வலியுறுத்தி உள்ளார்.
கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில், 10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் அனுமதிக்கப்படுவது இல்லை. மிக நீண்ட காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் இந்த வழக்கத்தை எதிர்த்து, இந்திய இளம் வக்கீல்கள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் சுப்ரீம் கோர்ட்டில் மனுக்களை தாக்கல் செய்தனர்.
இந்த மனு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 13-ம் தேதி சுப்ரீம் கோர்ட்ட பரிந்துரைத்திருந்தது. அப்போது சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்கள் செல்ல தடை விதிப்பது பாகுபாடு ஆகாதா? அரசியலமைப்பு சட்டத்தின்கீழ் அளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை மீறும் செயலாகாதா? என்பது உள்ளிட்ட 5 கேள்விகளை நீதிபதிகள் பதிவு செய்திருந்தனர்.
இந்த மனுக்கள் மீது தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பளித்தது. அதில், சபரிமலை வழிபாட்டில் பெண்களுக்கு பாகுபாடு காட்டக்கூடாது. சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும். பெண் கடவுள்களை வணங்கும் நாட்டில் பெண்கள் பலவீனமானவர்கள் அல்ல. நீண்ட காலமாக பெண்கள் மீது பாகுபாடு காட்டப்பட்டு வருகிறது. கடவுளை வணங்குவதில் ஆண் - பெண் பாகுபாடுக் கூடாது. கோவிலுக்குள் பெண்கள் செல்ல அனுமதி மறுப்பது சட்ட விரோதம் என குறிப்பிட்டார்.
இந்நிலையில், சபரிமலை வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு குறித்து, திமுக ராஜ்யசபா எம்.பி கனிமொழி தனது ட்விட்டரில் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
"சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் உச்சநீதிமன்றத் தீர்ப்பு வரலாற்றுச் சிறப்பு மிக்கது. குறிப்பாக, கடவுள் மனிதர்களை சமமாக படைத்தார் என்று நம்பும் பக்தர்களுக்கு இது மகிழ்வைத் தரும். பாராளுமன்றமும், சட்டமன்றங்களும், இதை பின்பற்றி, பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவார்கள் என்று நம்புகிறேன்" என பதிவிட்டுள்ளார்.