ஆவடி இராணுவ சீருடை தொழிற்சாலை முடக்க வேண்டாம்- மு.க.ஸ்டாலின் அறிக்கை
ஆவடி இராணுவ சீருடை தொழிற்சாலை முடக்க வேண்டாம் என மத்திய அரசை வலியுறுத்தி திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இரண்டாயிறத்துக்கு மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரியும் ஆவடி இராணுவ சீருடை தொழிற்சாலை முடக்கும் முயற்சியை கைவிடுவதோடு, தொழிற்சாலையை தொடர்ந்து நடத்திட வேண்டுமென மத்திய அரசை வலியுறுத்தி திமுக கழகச் செயல் தலைவரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-
தமிழகத்தின் தலைநகர் சென்னை ஆவடியில் உள்ள “இராணுவ சீருடை தயாரிப்பு தொழிற்சாலை”யில் உற்பத்தியை நிறுத்தி, 2121க்கும் மேற்பட்ட ஊழியர்களின் வாழ்வை கேள்விக்குறியாக்கும் ஒரு தலைப்பட்சமான முடிவிற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
ராணுவ வீரர்களுக்கு அவர்கள் பணி புரியும் இடத்திற்கு ஏற்ற தட்பவெட்ப நிலைக்கு தகுந்தாற்போல் சீருடை தயாரித்துக் கொடுக்கும் ஆவடி சீருடை தொழிற்சாலை வேலை வாய்ப்பிற்கும், நாட்டின் பாதுகாப்பிற்கும் மிகவும் உதவிகரமாக இருந்து வருகிறது. பல்வேறு தட்ப வெட்ப நிலைகளுக்கு ஏற்பட ராணுவ வீரர்களுக்கு தேவையான உயர் தொழில்நுட்பமுடைய உலகத் தரம் வாய்ந்த சீருடைகளை தயாரித்துக் கொடுப்பதில் முன்னனி நிறுவனமாக திகழ்ந்து வருகிறது.
ஆனால் படைத்துறை தொழிற்சாலைகள் உற்பத்தி செய்யும் சுமார் 650-க்கும் மேற்பட்ட பாதுகாப்பு தளவாடங்களில் 250 பொருட்களை மத்திய அரசு குறைந்த தொழில் நுட்பம் உள்ள பொருள்கள் என அறிவித்துள்ளதாலும், ஏழாவது ஊதியக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் “சீருடை படி”யாக 10 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தினாலும் ராணுவ சீருடைகள் தயாரிக்கும் ஆவடி சீருடை தொழிற்சாலை முடங்கிப் போயிருக்கிறது.
தொழிற்சாலையில் சீருடை உற்பத்தி செய்ய வேண்டாம் என்றும், ஊழியர்கள் நியமனம் எதுவும் செய்ய வேண்டாம் என்றும் கூறி ஆவடி சீருடை தொழிற்சாலையை முடக்கி வைத்திருப்பது - அதிலும் குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்த பாதுகாப்பு துறை அமைச்சர் இருக்கும் போது நடந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அதிலும் குறிப்பாக இந்த முடிவுகள் எதிலும் தொழிற்சங்கங்களின் கருத்துக்களோ, போராட்டங்களோ, மனுக்களோ கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படாமல் மத்திய பா.ஜ.க. அரசு அராஜகமாக, எதேச்சதிகாரமாக இப்படியொரு முடிவை எடுத்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களை - குறிப்பாக 800-க்கும் மேற்பட்ட பெண் ஊழியர்களின் வாழ்வில் சூறாவளிக் காற்றை வீச வைத்திருக்கிறது.
நான்கு ஆண்டு கால பா.ஜ.க. ஆட்சியில் தமிழகத்தில் உள்ள மத்திய அரசின் அலுவலகங்கள் ஒன்று மாற்றப்படுகிறது. இல்லையென்றால் மூடப்படுகிறது. இதே போல் புகழ் மிக்க ஆவடி சீருடை தொழிற்சாலையையும் மூடுவதற்காக மத்திய பா.ஜ.க. அரசு முனைப்புடன் செயல்பட்டு வருவது தமிழகத்தின் முன்னேற்றம் பற்றியோ, வேலை வாய்ப்பு பற்றியோ மத்திய அரசுக்கு இருக்கும் அலட்சிய மனப்பான்மையை காட்டுகிறது.
புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் காட்டாத மத்திய பா.ஜ.க. அரசு, இது போன்ற 55 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான தொழிற்சாலையை - அதுவும் நாட்டின் ராணுவ வீரர்களுக்கு தரமுள்ள சீருடைகளை தயாரித்துக் கொடுக்கும் பெருமை மிக்க தொழிற்சாலையை சீர்குலைப்பது வேலை இழப்பு அபாயத்தை ஏற்படுத்தும். ராணுவ சீருடை உற்பத்தி தொழில் நுட்பத்திற்கான பயிற்சி பெறும் அப்ரன்டீஸ் தொழிலாளர்களின் எதிர்காலம் பாழாகும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
ஆகவே ராணுவ வீரர்களுக்கு ஆவடி சீருடைகள் தயாரிக்கும் தொழிற்சாலை மூலம் தரமுள்ள சீருடைகள் வழங்கும் திட்டத்தை தொடர்ந்திட வேண்டும் என்றும், நாட்டு பாதுகாப்பில் தமிழகத்தின் பங்களிப்பாக இருக்கும் இந்த சீருடை தயாரிக்கும் தொழிற்சாலையை தொடர்ந்து நடத்திட வேண்டும் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் மாண்புமிகு நிர்மலா சீத்தாராமன் அவர்களை கேட்டுக் கொள்கிறேன்.
2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கும், அப்ரன்டீஸ் தொழிலாளர்களுக்கும் ஏற்பட்டுள்ள அச்சத்தை போக்கும் வகையில் படைத்துறை தொழிற்சாலைகள் உற்பத்தி செய்யும் பாதுகாப்பு தளவாடங்களில் 250க்கும் மேற்பட்ட பொருட்களை குறைந்த தொழில் நுட்பம் உள்ள பொருள்கள் என்று வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பையும், உற்பத்தி செய்ய வேண்டாம் என்று வழங்கியுள்ள ஆணையையும் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் எனவும் மத்திய பாதுகாப்பு அமைச்சரை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.