ஆளும் அரசின் நவடிக்கைகளை கண்டிக்கும் வகையில் அடையாள வெளிநடப்பு செய்தோம். உடனே திமுக வெளிநடப்பு செய்தது எனக் கொட்டை எழுத்துக்களில் செய்தி போடவேண்டாம். அதேநேரத்தில் திமுக எதற்காக வெளிநடப்பு செய்தது எனப் பதிவிடுங்கள் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நேற்று சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்த பிறகு, செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியது, 


கடந்த சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி கடிதம் கொடுத்திருந்தேன். கடந்த கூட்டத்தொடரின் போது ஒவ்வொரு நாளும் கேட்டதற்கு, ஆய்வில் இருக்கிறது என்றே சபாநாயகத்தில் பதில் அளித்துக் கொண்டிருந்தார். நிராகரிக்கவில்லை. தற்போது கூட்டத் தொடர் தொடங்குவதற்கு 4 நாட்களுக்கு முன்னரே சபாநாயகர் கவனத்திற்கு நான் கொண்டு வந்திருக்கிறேன். நேரமில்லா நேரத்தைப் பயன்படுத்தி, அது என்னவாயிற்று என்று கேட்டோம்.


CAA-வுக்கு எதிராகப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்ற திமுகவின் கோரிக்கை குறித்து "ஏற்கனவே நீங்கள் சட்டமன்றக் கூட்டத் தொடரில் வைத்த கோரிக்கையை நான் நிராகரித்து விட்டால் அதை மீண்டும் அடுத்த கூட்டத் தொடரில் வைக்கக்கூடாது” என விதிமுறைக்கு ஒரு தவறான விளக்கத்தைக் கூறி சபாநாயகர் பதில் சொன்னார். அது விவாதிக்கப்படவில்லை. விவாதிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்டு இருந்தால் ஏற்றுக் கொள்கிறோம். அது ஆய்வில் இருக்கிறது என்றுதான் சபாநாயகர் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தார். 


சட்டமன்ற விதி 174 ல் தெளிவாக இருக்கிறது. தனித் தீர்மானம் ஒன்று அரசுக்குச் செய்யப்படும் பரிந்துரை வடிவிலோ, பேரவையின் கருத்தை அறிவிக்கும் முறையிலோ, எக்காரணத்திற்கேனும் பேரவையின் குழு ஒன்றை நியமிப்பதற்குக் கொண்டுவரப்படும் தீர்மான வடிவிலோ அல்லது அத்தனித் தீர்மானத்தின் பொருளுக்கேற்ப வேறு எந்த வடிவிலோ இருக்கலாம் எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதே கூட்டத் தொடரில் விவாதிக்கப்படும் பொருள் குறித்து மீண்டும் விவாதம் எழுப்புவதாக அமையக்கூடாது என்பதுதான் அந்த விதிமுறையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.


ஜல்லிக் கட்டு வழக்கு நீதிமன்றத்தில் இருந்தபோது விவாதம் நடைபெற்றது. விவாதம் மட்டுமின்றி சட்டமன்றத்தில் தீர்மானமும் நிறைவேற்றினோம். எனவே குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை குறித்து விவாதிக்க ஆளும் அதிமுக அரசு மறுக்கிறது என்றார். அதுமட்டுமில்லாமல் என்சிஆர், என்.பி.ஆர் போன்றவற்றை குறித்தும் முதல்வர் பதில் சொல்லவில்லை. 


அது மட்டுமின்றி, கடந்த 3 நாட்களுக்கு முன்னர் வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்தி அங்கிருக்கும் மக்கள் போராட்டம் நடத்தினார்கள். அவர்கள் மீது காவல்துறையினர் கண்மூடித் தனமாக தடியடி நடத்தி, ஒரு பெரிய அக்கிரமத்தை, அராஜகத்தைச் செய்திருக்கிறார்கள். அங்கே அசம்பாவிதங்கள் நடந்துள்ளன. இதனால் பலர் காயம் அடைந்துள்ளனர். 


இதற்கிடையே சம்பந்தப்பட்டவர்களை அழைத்துக் காவல் ஆணையர் பேசி இருக்கிறார். பேச்சுவார்த்தையால் என்ன பயன் கிடைத்தது. மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரும் அவர்களிடம் பேச்சு நடத்தியதாக செய்தியைப் பார்த்தோம். அதுமட்டுமின்றி நேற்று முதலமைச்சர் கூட அவர்களை அழைத்துப் பேசியதாகச் செய்தியைப் பார்த்தோம். அதுபற்றி எல்லாம் எந்த விளக்கத்தையும் இந்த சபையில் அவர்கள் அளிக்கவில்லை. 


சபாநாயகரும் எங்களது தனித் தீர்மானத்தை ஏற்பதாக இல்லை. இவற்றையெல்லாம் கண்டிக்கும் வகையில் திமுக சார்பில் அடையாள வெளிநடப்பு செய்துள்ளோம். இது நிரந்தர வெளிநடப்பு அல்ல. திமுக வெளிநடப்பு செய்தது எனக் கொட்டை எழுத்துக்களில் போடவேண்டாம். திமுக எதற்காக வெளிநடப்பு செய்தது எனப் பதிவிடுங்கள்.


இவ்வாறு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.