தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மற்றும் திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் கடந்த ஜூலை 27-ஆம் நாள் நள்ளிரவில் உடல்நிலை கோளாறு காரணமாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி மாலை 6.10 மணியளவில் காலமானார். திமுக தொண்டர்கள் படைசூழ மெரினாவில் அண்ணாவின் பக்கத்தில் அடக்கம் செய்யப்பட்டார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்போது திமுகவின் செயல் தலைவராக செயல்பட்டு வரும் மு.க. ஸ்டாலின் தான், திமுகவின் அடுத்த தலைவர் பதவியை வாசிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த ஆகஸ்ட் 9 ஆம் நாள் திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தில் திமுக செயல் தலைவர் முக ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். அவருடன் திமுக-வின் முக்கிய தலைவர்கள் இருந்தனர். வரும் ஆகஸ்ட் 14 ஆம் நாள் திமுக சார்பில் செயற்குழு கூட்டம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும் திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு பின்னர் நடைபெறும் முதல் செயற்குழு கூட்டம் என்பதால், இந்த கூட்டத்தில், திமுக தலைவர் யார்? என்பது போன்ற முக்கிய முடிவுகள் பல எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.


இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 13 ஆம் தேதி திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தில், அவரது மூத்த மகன் மு.க. அழகிரி தனது குடும்பத்துடன் அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், என் அப்பாவிடன் என் ஆதங்கத்தை தெரிவித்திருக்கின்றேன். அது தற்போது மக்களுக்கு தெரியாது, காலம் வரும்போது மக்களுக்கு தெரியவரும். எனது ஆதங்கம் கட்சி தொடர்பானதாக தான் இருக்கும். தலைவர் கலைஞரின் உன்மையான, விசுவாசமான தொண்டர்கள் என் பக்கம் உள்ளனர். அனைவரும் என்னை ஆதரித்துக்கொண்டு இருக்கின்றனர். கட்சி தொடர்பான என் ஆதங்கத்திற்கு காலம் விரைவில் பதில் சொல்லும். நான் தற்போது திமுக-வில் இல்லை., எனவே செயற்குழு கூட்டம் பற்றி எனக்கு தெரியாது என தெரிவித்தார். 


இச்சம்பவம் திமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அடுத்த நாள் (ஆகஸ்ட் 14) திமுக செயக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியை குறித்து அடுத்த கட்ட முக்கிய நடவடிக்கை பற்றி விவாதிக்கப் படும் என எதிர்பார்க்கப்பட்ட செயற்குழு கூட்டத்தில் கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் பேசிய மு.க. ஸ்டாலின் கூறியதாவது:-


என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே. நான் தலைவரை மட்டுமல்ல, தந்தையையும் இழந்திருக்கிறேன். கலைஞர் இல்லாமல் செயற்குழு கூட்டம் நடைபெறுவதை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. அண்ணாவின் பக்கத்தில் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்பதே திமுக தலைவர் கருணாநிதியின் ஆசை. அவரின் ஆசையை நிறைவேற்ற எதையும் இழக்க தயார் என கூறி முதல்வரை சந்தித்தேன். முதல்வரிடம் கெஞ்சிக் கேட்டும் மெரினாவில் கலைஞருக்கு இடம் தர மறுத்தார். ஆனால் எப்படியும் இடம் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் இருந்தோம். மெரினாவில் இடம் கிடைத்ததின் வெற்றி  வழக்கறிஞர் குழுவுக்குதான் சேரும், அவர்களுக்கு நன்றி. பெரிய சோகத்தில் கிடைத்த ஒரு மகிழ்ச்சி அது என கூறி தனது பேச்சை நிறைவு செய்தார். அதன் பிறகு திமுக அவசர செயற்குழு கூட்டமும் நிறைவு பெற்றது என அறிவிக்கப்பட்டது. 


இந்நிலையில், அடுத்த வாரம் 28 ஆம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் காலை 9 மணி அளவில் திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இதனால் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்துக்கொள்ளுமாறு திமுகவின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிக்கை வெளியிட்டு உள்ளார். இந்த கூட்டத்தில் தலைவர் மற்றும் பொருளாளர் தேர்தல் நடைபெற இருப்பதகாவும் கூறப்பட்டு உள்ளது.



மறுபுறம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி மறைந்த திமுக தலைவர் மு. கருணாநிதி சமாதியை நோக்கி பேரணி செல்ல உள்ளதாக, அவரது மூத்த மகன் மு.க அழகிரி அறிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.