எடப்பாடி நாளை வரை முதல்வராக நீடிப்பாரா? பொன் சந்தேகம்
எடப்பாடி பழனிசாமி, நாளை வரை முதல்வராக இருப்பாரா என்பதே கேள்விக்குறி என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், கோவையில் இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்து கூறினார்.
ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அதிமுக-வில் பிளவு ஏற்பட்டுள்ளது. அக்கட்சியின் பொதுச் செயலாளராக நியமிக்கப் பட்ட சசிகலாவின் ஆதரவாளர்கள் ஒரு அணியாகவும், முன்னாள் முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் இன்னொரு அணியாகவும் செயல்பட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் சசிகலா ஆதரவாளரான எடப்பாடி பழனிச்சாமிக்கு நேற்று காலையில் ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு விடுத்தார். இதன்படி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் 31 பேர் கொண்ட தமிழக அமைச்சரவை நேற்று கவர்னர் தலைமையில் பொறுப்பேற்றனர்.
பதவி பிரமாணம் முடிந்தவுடன் நேராக பழனிச்சாமி உள்ளிட்ட தமிழக அமைச்சர்கள் முன்னால் முதல்வர் ஜெயலலிதா சமாதியில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள்.
இந்நிலையில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:-
குடும்ப ஆட்சியை வர விட வேண்டாம். எடப்பாடி பழனிசாமி, நாளை வரை முதல்வராக இருப்பாரா என்பதே கேள்விக்குறி. தமிழகம் தற்போதைய முதல்வரின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்காது. அதற்காக, திமுக ஆட்சி வரவேண்டும் என்பதையும் மக்கள் விரும்பவில்லை என்றார்.