மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலையுறுதி திட்டத்தின் கூலித்தொகையை உயர்த்த மத்திய அரசின் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகத்துக்கு தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலையுறுதி திட்டம் என்ற திட்டத்தின்கீழ் கிராமப்புற மக்களுக்கு உதவும் விதமாக கிராமங்கள் எங்கும் நடைபெறும் அரசுப் பணிகளில் உள்ளூர் மக்களுக்கு ஆண்டில் குறைந்தபட்சம் 100 நாட்களுக்கு வேலைவாய்ப்புக்கு உறுதியளிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
 
இந்த திட்டத்துக்கு தினக்கூலியாக அளிக்கப்படும் தொகை மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுகிறது. நாள் ஒன்றுக்கான கூலி 168 ரூபாயிலிருந்து 274 ரூபாய் வரை (மாநில அளவில் வேறுபாடு) ஆக முன்னர் உயர்த்தப்பட்டது. கடந்த 2018 ஆண்டு நிலவரப்படி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 224 ரூபாய் அளிக்கப்படுகிறது.


விவசாய கூலி தொழிலாளர்களுக்கு தினக்கூலியை நிர்ணயம் செய்யும் அதிகாரத்தை மத்திய அரசின் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகம் பெற்றுள்ளது.  அந்தவகையில் 100 நாள் வேலை திட்டத்துக்கான உயர்த்தப்பட்ட கூலியையும் இந்த அமைச்சகம்தான் நிர்ணயித்து வருகிறது.


இன்றுடன் தொடங்கும் 2019-2020 நிதியாண்டுக்கான 100 நாள் வேலை திட்டத்துக்கான உயர்த்தப்பட்ட கூலியை இந்த அமைச்சகம் இன்று அறிவித்திருக்க வேண்டும், ஆனால் தற்போது மக்களவை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதால் கூலி உயர்வு பற்றிய அறிவிப்பை தேர்தல் நடத்தை விதிமீறலாக கருதும் வாய்ப்புள்ளது.


எனவே, தினக்கூலி தொகையை உயர்த்தி அறிவிக்க டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்திடம் மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகம் அனுமதி கோரியிருந்தது. இதற்கு தலைமை தேர்தல் ஆணையம் இன்று அனுமதி அளித்துள்ளது.


இதன் அடிப்படையில், 100 நாள் வேலையுறுதி திட்டப்பணிகளுக்காக அந்தந்த மாநிலத்தில் அளிக்கப்படும் தினக்கூலியில் 5% வரை உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.