தமிழகத்தில் வாக்காளர் சரிபார்ப்பு மற்றும் பட்டியலில் உள்ள திருத்தங்களை கண்காணிக்க 10 IAS அதிகாரிகள் நியமிக்கப்பட்டு இருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாடு முழுவதும் பொதுமக்களிடம் உள்ள வாக்காளர் அடையாள அட்டையில் அதிகளவில் தவறுகள் உள்ளதாகவும், அதில் உள்ள படங்கள் மாற்றப்பட்டுள்ளதாகவும், வாக்களிக்க சென்றால் உங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை என்றும் புகார் எழுந்த நிலையில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


எதிர்வரும் தேர்தலை முன்னிட்டு அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகளுக்கும் இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் அடையாள அட்டையை 100% சரி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவின் பேரில் தமிழகத்தில் கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியலை சரி செய்யும் பணியில் தேர்தல் அலுவலர்கள் ஈடுபடுவார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


அதே சமயம் வாக்காளர் அட்டையில் உள்ள திருத்தங்களை சரி செய்ய புதிய மொபைல் ஆப் ஒன்றை இந்திய தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது. இந்த மொபைல் ஆப் மூலம், வாக்காளர்கள் தங்களிடம் உள்ள புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டையில் பதிவாகி இருக்கும் பிறந்த தேதி, பெயர், உறவு முறை, புகைப்படம், பாலினம் ஆகியவை வாக்காளர் பட்டியலில் சரியாக இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ளலாம்.


வாக்காளர் பட்டியலில் தவறான தகவல் இருக்கும் பட்சத்தில், NVSP இணையதளத்தில் இருந்து "ஓட்டர்ஸ் ஹெல்ப் லைன்" என்ற  செயலியை வாக்காளர்கள் பதிவிறக்கம் செய்து தாங்களே திருத்தம் செய்யும் வசதியை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது. இப்படி மொபைல் செயலி மூலம் திருத்தம் செய்தவர்களின் விண்ணப்பத்தை தேர்தல் அலுவலர்கள் தங்கள் வீடுகளுக்கே வந்து சரிபார்க்கும் பணியை மேற்கொள்வார்கள். 


அவ்வாறு திருத்தம் செய்ய வரும்போது, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை, குடும்ப அட்டை உள்ளிட்ட ஏதாவது ஒரு அசல் ஆவணங்களை அவர்களிடம் காட்ட வேண்டும். பின்னர் வாக்காளர் கூறிய தவறுகள் திருத்திக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. தமிழகத்தில் இந்த திட்டத்துக்கு முதலில் போதிய வரவேற்பு இல்லை. இதையடுத்து இதற்கான காலக்கெடுவை அக்டோபர் 15-ஆம் தேதி நீட்டிக்கப்பட்டது. தற்போது மீண்டும் இரண்டாவது முறையாக வருகிற நவம்பர் 18-ஆம் தேதி வரை நீட்டித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இதை கண்காணிக்க 10 IAS அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர்.


இதுகுறித்து சென்னை தலைமை செயலகத்தில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு நேற்று செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்., தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு திட்டம் செப்டம்பர் 1-ஆம் தேதி தொடங்கப்பட்டது. தமிழகத்தில் மொத்தம் 5.99 கோடி வாக்காளர்கள் உள்ளனர். 1.64 கோடி பேர், தங்கள் பெயர், விலாசம், போட்டோ உள்ளிட்டவை சரியாக உள்ளதா என்று கம்ப்யூட்டர், செல்போன் மற்றும் தாலுகா அலுவலகம் சென்று வாக்காளர்கள் பட்டியலை சரிபார்த்துள்ளனர். 


இருந்தபோதிலும், அதிகமாக விழிப்புணர்வு ஏற்படுத்த இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதனால் வாக்காளர் சரிபார்ப்பு திட்டம் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை என்பதை, அக்டோபர் 15-ஆம் தேதி வரை தேர்தல் ஆணையம் நீட்டிப்பு செய்தது. தற்போது, நவம்பர் 18-ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அதுவரை வாக்காளர்கள், தங்கள் பெயர்கள் சரி செய்வது, திருத்தம் செய்ய வாக்காளர்கள் 1,950 என்ற உதவி எண்ணில் தொடர்பு கொண்டும், NVSP என்ற செல்போன் செயலி, தனி இணையதளம், பொது சேவை மையங்கள், வாக்காளர் சேவை பிரிவுகள் ஆகியவற்றுக்கு சென்று மேற்கொள்ளலாம் என குறிப்பிட்டுள்ளார்.