எஸ்.விஜயன் எழுதிய ‘நாட்டை உலுக்கும் ரஃபேல் பேர ஊழல்’ என்ற புத்தகத்தை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 23 ஆம் தேதி பிரான்சிடம் இருந்து, ரபேல் போர் விமானங்களை வாங்க, ரூ. 58 ஆயிரம் கோடி மதிப்பில் ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்நிலையில், இந்த கொள்முதல் ஒப்பந்தத்தில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்திருப்பதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். ரஃபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும், நீதிமன்ற கண்காணிப்பில் CBI விசாரணை நடத்தவும் கோரி யஷ்வந்த் சின்ஹா, அருண் சோரி மற்றும் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 


இந்த வழக்கை விசாரித்து வந்த உச்சநீதிமன்றம், ரஃபேல் போர்விமானங்கள் கொள்முதல் குறித்து விசாரணை நடத்த வேண்டிய அவசியமில்லை எனக்கூறி மனுக்களைத் தள்ளுபடி செய்கிறோம் என தீர்ப்பு அளித்தது.


இந்த விவகாரம் தொடர்பான புத்தகம் நாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல் என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ளது. விஜயன் என்பவர் எழுதியுள்ள இந்தப் புத்தகம் இன்று மாலை வெளியிடப்பட இருந்தது. இந்திய சமூக விஞ்ஞானக் கழகத் தலைவர் வீ.பா.கணேசன் வெளியிட, இந்து குழும தலைவர் என்.ராம் இன்று வெளியிட்டுப் பேச இருந்தார். அ.குமரசேன், இயக்குனர் ராஜூ முருகன், பத்திரிகையாளர் ஜெயராணி, புத்தகத்தைப் பதிப்பித்துள்ள பாரதி புத்தகாலயம் நாகராஜ் ஆகியோர் பேச இருந்தனர்.


இந்நிலையில், மக்களவை தேர்தல் நடத்தை விதி முறைகள் அமலில் இருப்பதால், புத்தகத்தை வெளியிட, ஆயிரம் விளக்கு தேர்தல் பறக்கும் படை அதிகாரி எஸ்.கணேஷ் தடை விதித்துள்ளார். அதையும் மீறி வெளியிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.