தமிழ்நாட்டில் காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் தேதி அறிவிப்பு!
தமிழ்நாட்டில் காலியாக உள்ள மேலும் இரண்டு மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு அக்டோபர் 4 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் மூன்று மாநிலங்களவை உறுப்பினர் பதவி காலியாக இருந்த நிலையில் அவற்றில் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் அறிவிக்கப்பட்டது. மாநிலங்களவை உறுப்பினராக இருந்த அ.தி.மு.க.வை சேர்ந்த ராணிப்பேட்டை முகமது ஜான் கடந்த மார்ச் மாதம் மரணம் அடைந்தார். அவரது பதவிக்காலம் 2025 ஜூலை 24 வரை இருந்ததால் அந்த இடத்துக்கு தமிழகத்தில் இருந்து வேறு ஒருவரை தேர்ந்தெடுக்க இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
தி.மு.க. சார்பில் எம்.எம்.அப்துல்லா வேட்பாளராக அறிவிக்கப்பட்டு வேட்பு மனு தாக்கல் செய்தார். சுயேட்சையாக 3 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். வேட்பு மனுக்கள் பரிசீலனையின்போது, திமுக வேட்பாளர் அப்துல்லா தவிர மற்ற மூவரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. திமுக வேட்பாளர் எம்எம் அப்துல்லா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். எம்.எம்.அப்துல்லா எம்பி ஆனதால் மாநிலங்களவையில் திமுகவின் பலம் 8 ஆக உயர்ந்துள்ளது. அப்துல்லா 2025 ஜூலை 24 வரை எம்பியாக செயல்படுவார்.
இந்த நிலையில் தற்போது அதிமுகவின் வைத்திலிங்கம் மற்றும் கேபி முனுசாமி ஆகிய இருவரும் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் எம்எல்ஏக்கள் ஆக வெற்றி பெற்றதை அடுத்து மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர். இந்த 2 எம்.பி. பதவிகளுக்கான இடங்களுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்படாமல் இருந்தது. தற்போது இந்த இரண்டு மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு தேர்தல் வரும் அக்டோபர் 4ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனை அடுத்து அதிமுக மற்றும் திமுக கூட்டணிகள் இந்த மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் வெற்றி பெற திட்டமிட்டு வருகின்றனர். இரண்டு மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலில் போட்டியிட செப்டம்பர் 22ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்றும், செப்டம்பர் 27ஆம் தேதி வேட்புமனு வாபஸ் பெற கடைசி தேதி என்றும், தேவைப்பட்டால் அக்டோபர் 4ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும் அன்றைய தினமே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ALSO READ சி.ஏ.ஏ-வுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம்: பாஜக, அதிமுக வெளிநடப்பு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR