எண்ணூர் காமராஜர் துறைமுகத்தை தனியார்மயமாக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கேட்டுக் கொண்டு உள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இது தொடர்பாக அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் கூறப்பட்டதாவது:-


தமிழ்நாட்டில் சென்னை அருகே உள்ள எண்ணூரில் காமராஜர் துறைமுகம் உள்ளது. இது லாபகரமாக இயக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் உள்ள 12 பெரிய முக்கியத் துறைமுகங்களில் காமராஜர் துறைமுகம் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. காமராஜர் துறைமுகத்தின் லாபத்தில் இருந்து குறிப்பிட்டத் தொகை மத்திய அரசுக்கு பங்கீடாக வழங்கப்பட்டு வருகிறது.


இதனை தனியாருக்கு படிப்படியாக தாரை வார்க்கும் முயற்சியை தற்போது மத்திய பாஜக அரசு எடுக்க இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த முயற்சியை மத்திய பாஜக அரசு கைவிட வேண்டும்.


மத்திய அரசின் பங்கீட்டுடன் இயக்கப்படும் காமராஜர் துறைமுகத்தில் நிலக்கரி இறக்குமதி செய்யப்படுகிறது. மேலும் சென்னை துறைமுகம் தூசி சரக்குகளை – (சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும்) - (Dust Cargo) கையாள நீதிமன்றம் புறக்கணித்ததால் தற்போது அந்த சரக்குகள் காமராஜர் துறைமுகத்தின் மூலம் நவீன தொழில்நுட்பத்துடன் கையாளப்படுகிறது.


குறிப்பாக சென்னையில் தயாரிக்கப்படும் கார்களில் பெரும்பாலானவை இந்த துறைமுகத்தின் மூலம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த வருடத்தில் மட்டும் இந்த துறைமுகத்தின் மூலம் 480 கோடி நிகர லாபம் ஈட்டப்பட்டுள்ளது. இதற்கான பங்கீட்டுத் தொகை பங்குதாரர்களான மத்திய அரசுக்கும், சென்னை துறைமுகத்துக்கும் வழங்கப்பட்டுள்ளது. காமராஜர் துறைமுகத்துக்கு அருகே பல தனியார் துறைமுகங்கள் அமைந்தாலும் காமராஜர் துறைமுகத்தின் சரக்கு கையாளும் திறன் கூடிக்கொண்டே தான் இருக்கிறது.


இந்த வருடம் மட்டும் இத்துறைமுகத்தின் மூலம் 90 மில்லியன் டன் சரக்கு கையாளுவதற்கு திட்டமிடப்பட்டு செயல்படத் தொடங்கப்பட்டுள்ளது.மேலும் மத்திய அரசு ஏற்கனவே இந்த துறைமுக வளர்ச்சிக்காக நிதி ஒதுக்கீடும், விரிவாக்கத்திற்காக நில ஒதுக்கீடும் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.


மத்திய பா.ஜ.க. அரசு இத்துறைமுகத்தை தனியாருக்கு படிப்படியாக விற்க முடிவு செய்தால் இத்துறைமுகத்தின் மூலம் மத்திய அரசுக்கு கிடைக்கும் வருவாய் கிடைக்காது.


மேலும் இத்துறைமுகப் பணிகளில் உள்ள பணியாளர்கள், அதிகாரிகள் ஆகியோரின் பணிகளுக்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புண்டு.எனவே மத்திய பா.ஜ.க. அரசு காமாரஜர் துறைமுகத்தை தனியாருக்கு படிப்படியாக தாரை வார்க்க எடுக்கும் முயற்சியை ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்தக்கூடிய நடவடிக்கையை தமிழக அரசு உடனடியாக எடுக்க வேண்டும்.


மேலும் லாபத்தில் இயக்கப்படும் காமராஜர் துறைமுகத்தை எக்காரணத்திற்காகவும் அதன் பங்குகளை தனியாருக்கு விற்க முயற்சி மேற்கொள்ளக்கூடாது என மத்திய பா.ஜ.க. அரசை த.மா.கா. வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.


இவ்வாறு ஜிகே வாசன் கூறியுள்ளார்.