தமிழர் விழாவை அனைவரும் ஒன்றிணைந்து கொண்டாட வேண்டும் என்பதற்காகவே சமத்துவப் பொங்கல் விழாவாக கொண்டாடுகிறோம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வல்லக்கோட்டை ஊராட்சியில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர் "இந்த சமத்துவப் பொங்கள் விழாவினை, நிகழ்ச்சியாக மட்டும் கருதவில்லை; நம்முடைய இல்லத்தில், உள்ளத்தில் நடைபெறும் நிகழ்ச்சியாகத்தான் நான் பார்க்கிறேன்.


இந்நிகழ்ச்சியின் பெயர் சமத்துவப் பொங்கல் விழா. சமத்துவம் என்பதை அனைவரும் உணர்ந்திட வேண்டும், பெற்றிட வேண்டும் வாழ்ந்திட வேண்டும் என்பதற்காகத்தான் தந்தை பெரியார் அவர்கள் பாடுபட்டார்கள். அதற்காக அறிஞர் அண்ணா அவர்கள் பல தியாகங்கள் செய்து தன்னுடைய வாழ்நாள் முழுவதும் பணியாற்றினார்கள். அதைத் தொடர்ந்து பெரியார், அண்ணா வழியில் மறைந்தும், மறையாமலும் என்றும் நம்முடைய உள்ளத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் அதற்காகப் பல திட்டங்கள், சாதனைகளை அவர் ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது நிறைவேற்றித் தந்தார்கள். அதற்கு எத்தனையோ உதாரணங்களை இந்த நேரத்தில் நான் எடுத்துச் சொல்ல முடியும்.


அதில் குறிப்பிட்டுச் சொல்ல விரும்புவது, சமத்துவபுரம் என்ற பெயரில் அனைத்து மதத்தினரும் ஒன்று சேர்ந்து- ஒருங்கிணைந்து, ஒற்றுமையோடு, ஒருமித்த கருத்தோடு வாழ வேண்டும் என்பதற்காக, நாடு முழுவதும் சமத்துவபுரத்தை தலைவர் கலைஞர் அவர்கள் ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது உருவாக்கித் தந்தார்கள்.


ஒவ்வொரு மாவட்டத்தில், சட்டமன்றத் தொகுதியில், சமத்துவபுரங்கள் உருவாக்கப்பட்டன. அந்தச் சமத்துவபுரத்திற்கு தந்தை பெரியார் நினைவு சமத்துவபுரம் என்று பெயர் சூட்டி, அங்கே தந்தை பெரியார் அவர்களின் சிலையையும் அமைத்து ஏற்படுத்தித் தந்தார்கள். உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி என்ற பாகுபாடு இருக்கக் கூடாது. அந்தச் சமத்துவபுரத்தில் பிற்படுத்தப்பட்ட மக்கள் அல்ல, தாழ்த்தப்பட்ட மக்கள் அல்ல, சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் அல்ல உயர்ந்த சாதி வகுப்பினரும் அதிலே குடியேற வேண்டும் என்ற அடிப்படையில் அனைவரும் ஒற்றுமை உணர்வோடு அந்த வாழ வேண்டும் என்ற அடிப்படையில் அந்த சமத்துவபுரங்கள் நம்முடைய ஆட்சிக்காலத்தில்தான் தொடங்கப்பட்டன.


நாம் இன்றைக்கு பொங்கல் விழாவை கொண்டாடுகிறோம். தமிழர்களின் சின்னமாக கருதி இந்த நாளைக் கொண்டாடுகிறோம். எத்தனையோ பண்டிகை இருக்கிறது இந்த நாட்டில்; எந்தப் பண்டிகைக்கும் இத்தனை நாட்கள் விழா நடத்துவதாக வரலாறு கிடையாது.


உழவர் திருநாளாக கொண்டாடுகிறோம். வள்ளுவருடைய விழாவாக கொண்டாடுகிறோம். போகி விழாவாக, காணும் பொங்கலாகக் கொண்டாடுகிறோம். வள்ளுவருக்கும் விழா எடுக்கிறோம். இப்படிப் பல நாட்கள் விழா கொண்டாடப்படும் ஒரே திருநாள் நம் தமிழர் திருநாளாம் பொங்கல் விழா மட்டும்தான்.


பொங்கல் திருநாளை, தமிழர் திருநாளை, சமத்துவப் பொங்கலாக எல்லோரும் இணைந்து கொண்டாட வேண்டும். எப்படி எல்லோரும் இணைந்து ஒற்றுமையோடு வாழ்ந்திட வேண்டும் என தலைவர் கலைஞர் அவர்கள் கருதினாரோ, அதேபோல் இந்தத் தமிழர் விழாவையும் சமத்துவ விழாவாக எல்லோரும் ஒன்றிணைந்து கொண்டாட வேண்டும் என்பதற்காகத்தான் இதற்கு சமத்துவப் பொங்கல் விழா என்று பெயர் சூட்டி, இந்த விழாவை தொடர்ந்து கொண்டாடி வருகிறோம்.


நாம் ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது அரசு சார்பில் கொண்டாடினோம். இன்றைக்கு ஆட்சியில் இல்லை என்றாலும் கழகத்தின் சார்பில் இந்த விழாவைக் கொண்டாடி வருகிறோம். ஒவ்வோர் ஆண்டும் சமத்துவப் பொங்கல் விழாவில் தொடர்ந்து பங்கேற்கும் வாய்ப்புப் பெற்று வருகிறேன். அதுவும் காஞ்சிபுரம் மாவட்டத்தில்தான் பங்கேற்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறேன்.


இந்த வல்லக்கோட்டை ஊராட்சி கிராமத்தில் இருக்கும் மக்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து, குடும்பத்தோடு, பெண்கள், ஆண்கள், இளைஞர்கள், சிறுவர்கள், அத்தனை பேரும் ஒன்றுசேர்ந்து இந்த விழாவில் பங்கேற்றிருக்கிறார். இங்கே நிகழ்ச்சிகள் எல்லாம் சிறப்பாக இருக்கின்றன.


பண்டைக் கால கலாச்சார அடிப்படையில், நாட்டியங்கள், கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இசையுடன் பாடல்கள் பாடப்படுகின்றன. அப்போது இங்குள்ள தோழர்கள் ஆடிய காட்சிகளைப் பார்க்கிறபோது நானும் கொஞ்சம் ஆடலாமோ என்று தோன்றுகிறது. அந்த அளவுக்கு நான் மகிழ்ச்சியுடன், இங்கு நடைபெறும் விழாவில் பங்கேற்றுள்ளேன்.


இங்கே மாவட்டச் செயலாளர் அன்பரசன் அவர்கள் பேசும்போது, 'உள்ளாட்சித் தேர்தல் இந்த மாவட்டத்திற்கு வரவில்லை. வரும் என எதிர்பார்க்கிறோம். தேர்தல் வரும்போது நாம்தான் மிகப்பெரிய வெற்றியை பெறப்போகிறோம்' என்று கூறினார்.


ஏன் என்றால் நடந்து முடிந்திருக்கும் தேர்தலைப் பற்றி உங்களுக்குத் தெரியும். அது நாடாளுமன்றத் தேர்தலாக இருந்தாலும் சரி- ஒரு மிகப் பெரிய வெற்றியை நாம் பெற்றோம். அதற்குப் பிறகு தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெற்றது. அண்மையில் விக்கிரவாண்டி, நாங்குநேரியில் நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெறும் வாய்ப்பு நமக்குதான் இருந்தது. ஒன்றை மறந்துவிடக் கூடாது. ஆட்சியில் இருக்கும்போது இடைத்தேர்தல் நடந்தால், ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள்தான் வெற்றி பெறுவார்கள். அதுதான் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அது எப்படிப்பட்ட சூழ்நிலையில் வெற்றிபெறுகிறார்கள் என்ற விஷயத்திற்குள் போக விரும்பவில்லை. அது தற்போது தேவையும் இல்லை. அதற்கு முன்னர் 21 தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெற்றது. அப்படி நடைபெற்ற நேரத்தில் ஆளுங்கட்சி இடங்களை தி.மு.க. வசப்படுத்தியது என்பதை மறந்துவிடக் கூடாது.


எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஆளுங்கட்சி இடங்களை பிடித்த, பறித்த ஒரு வரலாற்றை நாம் பெற்றிருக்கிறோம். சட்டப் பேரவைத் தேர்தல் வந்தால், அது ஒரு ஆட்சிக்காக நடைபெறும் தேர்தல். 5 வருடத்திற்கு ஒருமுறை நடைபெறும். அரசை கட்டிக் காக்கிற தேர்தல். அந்த்த் தேர்தல் நடந்து முடிந்தவுடன் உள்ளாட்சித் தேர்தல் வைத்து விடுவார்கள். அப்படி வைக்கும்போது ஆட்சியில் இருப்பவர்கள்தான் அதிக இடங்களைப் பெறுவார்கள். அதுதான் தொடர்ந்து தமிழ்நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.


இந்த முறை அ.தி.மு.க. ஆட்சியில் உள்ளது. உடனடியாக தேர்தல் நடத்தவில்லை. 3 வருடம் காலம் தாழ்த்தி தேர்தல் நடத்தினார்கள். அந்தத் தேர்தலை நடத்தக்கூட மனமில்லை; என்றாலும் ஒப்புக்காக அறிவித்தார்கள். நீதிமன்றம் சென்று யாராவது வழக்கு போடுவார்களா? என்று எண்ணினார்கள்.


முறையாக நடத்தினால் யாரும் வழக்கு போடமாட்டார்கள். பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு, பெண்களுக்கு மலைவாழ் பகுதி மக்களுக்கு உரிய இடஒதுக்கீடை வழங்காமலேயே தேர்தல் அறிவிப்பை வெளியிட்டார்கள். அதனால்தான் நமது ஆர்.எஸ்.பாரதி அவர்கள் தி.மு.க. சார்பில் நீதிமன்றத்திற்கு சென்றார்கள். விசாரித்த நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. வழக்கு உச்சநீதிமன்றம் வரை சென்றது. அதைப் பற்றி நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அதற்குப் பிறகு 9 மாவட்டங்களில் தேர்தல் இல்லை எனக் கூறி மற்ற மாவட்டங்களில் தேர்தல் அறிவித்தார்கள்.


ஏன் என்றால், காஞ்சிபுரம், விழுப்புரம், திருநெல்வேலி, வேலூர் மாவட்டங்களைப் பிரித்தார்கள். பிரித்த காரணத்தினால் தேர்தலை நடத்த முடியாமல், 9 மாவட்டங்களைத் தவிர்த்து மற்ற மாவட்டங்களுக்கு தேர்தலை அறிவித்தார்கள். அது எப்படி நடந்தது என்பது உங்களுக்குத் தெரியும். தேர்தல் நடைபெறும் இடங்களில் சிசிடிவி வைக்க வேண்டும் என நாம் வலியுறுத்தியதால்தான் இவ்வளவு இடங்களைப் பிடித்தோம்.


எவ்வளவோ அக்கிரமங்கள் நடந்தன. அந்த அக்கிரமங்களை எல்லாம் தாண்டி, வாக்கு எண்ணிக்கையின் போது, வாக்குப்பதிவு மையத்தில் ஆளுங்கட்சி ஆட்கள் உள்ளே நுழைந்து நம்முடைய முகவர்களை விரட்டி, மிரட்டினார்கள். அதையும் தாண்டி நாம் வெற்றி பெற்றோம்.


வெற்றியைக் கூட அறிவிக்க முடியவில்லை. அறிவிக்காமல் தோல்வி அடைந்தவர்களை வெற்றி அடையச் செய்தார்கள். வெற்றி அடைந்தவர்களை தோல்வி அடைந்தவர்களாக அறிவித்தார்கள். நீதிமன்றத்திற்குச் சென்ற காரணத்தினால் ஓரளவு வெற்றி பெற்றோம்.


நம்முடைய அன்பரசன் அவர்கள் சொன்னார் - முறையாக நடந்திருந்தால் 80 சதவீதம் என்றார். நான் சொல்கிறேன் 100 சதவீதம் கூட நாம்தான் வெற்றி பெற்றிருப்போம்' என்று. அவ்வளவு அக்கிரமம், அநியாயம் நடைபெற்றது. அதையும் மீறி, 65 சதவீதம் வெற்றி பெற்று வந்திருக்கிறோம் என்றால், அது திராவிட முன்னேற்றக் கழகம் இன்றைக்கு கம்பீரமாக வீறுநடை போடக்கூடிய அளவுக்கு வளர்ந்து கொண்டிருக்கிறது என்பதற்கான எடுத்துக்காட்டு" என குறிப்பிட்டுள்ளார்.