சிதம்பரம் பெரும் அறிவாளி, சாதூரியமிக்கவர்: ED வழக்கறிஞர் துஷார் மேத்தா
சிதம்பரம் பெரும் அறிவாளி, சாதூரியமிக்கவர். அதனால் தான் முடிச்சுக்களை அவிழ்ப்பதில் சில சிரமங்கள் உள்ளது என வழக்கறிஞர் துஷார் மேத்தா கூறியுள்ளார்.
புதுடெல்லி: அமலாக்கத்துறையின் பண மோசடி வழக்கில் முன் ஜாமீன் கோரி போடப்பட்ட சிதம்பரத்தின் மனு மீதான விசாரணை இன்று தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அமலாக்கத்துறை வழக்கறிஞர் துஷார் மேத்தா தனது வாதங்களை முன்வைத்து வருகிறார்.
அமலாக்கத்துறையின் பண மோசடி வழக்கில் முன் ஜாமீன் கோரி போடப்பட்ட மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதி பானுமதி அமர்வு முன்பு நேற்று முன்தினம் நடைபெற்ற நிலையில், வழக்கை இன்று ஒத்திவைத்தத்தோடு, ப.சிதம்பரத்தை இன்று (ஆகஸ்ட் 27) மதியம் 12 மணி வரை கைது செய்ய உச்சநீதிமன்றம் தடை விதித்தது.
நேற்று ப.சிதம்பரம் சார்பாக மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் மற்றும் வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி ஆகியோர் ஆஜராகி தங்கள் தரப்பு வாதங்களை எடுத்து வைத்தனர். ப.சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர்கள் வைத்த அனைத்து வாதங்களுக்கும் விரிவாக பதில் அளிக்க 4 மணி நேரம் வேண்டும் என்று அமலாக்கத்துறை வழக்கறிஞர் துஷார் மேத்தா கோரிக்கை விடுத்ததை அடுத்து, இன்று பிற்பகல் 2 மணி முதல் தங்கள் வாதங்களை முன்வைக்க வேண்டும் என துஷார் மேத்தாவுக்கு உச்சநீதிமன்றம் கூறியது.
இதனையடுத்து, இன்று மீண்டும் வழக்கு விசாரணை தொடங்கியது. அமலாக்கத்துறை வழக்கறிஞர் துஷார் மேத்தா தனது வாதங்களை முன்வைத்து வருகிறார். அப்பொழுது அவர், சட்டவிரோத பண பரிமாற்றத்திற்கு யார் அனுமதி வழங்கியது? அதன்மூலம் யார் எல்லாம் ஆதாயம் பெற்றார்கள் என்ற கோணத்தில் விசாரித்து வருகிறோம். ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் எல்லாம் டிஜிட்டல் மயமாக நடந்துள்ளதால் நிறைய முடிச்சுகளை அவிழ்ப்பது சிரமாக உள்ளது. தொடர்ந்து அதற்க்கான பணிகள் நடைபெற்று வருகிறது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் வரை விசாரணை அறிக்கையை சிதம்பரத்துடன் பகிர்ந்து கொள்ள முடியாது என்று அவர் கூறினார்.
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கிற்கும் வெளிநாடுகளில் இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் சொத்துகளுக்கும் சம்மந்தம் உள்ளது. அதனால் தான் சில சொத்துகளை முடக்கியுள்ளோம். ஊழல் குற்றச்சாட்டு வேறு, வெளிநாடுகளுக்கு பணம் அனுப்புவதும், அங்கிருந்து கொண்டுவருவதும் வேறு. இந்த இரண்டு வழக்கும் தனித்தனியாக விசாரிக்கப்படுகிறது.
சிதம்பரம் பெரும் அறிவாளி, சாதூரியமிக்கவர். அதனால் தான் முடிச்சுக்களை அவிழ்ப்பதில் சில சிரமங்கள் உள்ளது. ஏனெனில் அறிவில்லாதவர்களால் இது போன்ற சட்டவிரோத பணபரிமாற்றங்களில் ஈடுபட முடியாது என அமலாக்கத்துறை வழக்கறிஞர் துஷார் மேத்தா கூறியுள்ளார்.
சிதம்பரத்தை கைது செய்வதற்கான ஏஜென்சியின் அதிகாரத்தை குறைக்க வேண்டாம் என்று துஷார் மேத்தா உச்ச நீதிமன்றத்தை வலியுறுத்தினார். கைது செய்ய சட்டரீதியான உரிமை இருக்கிறது. ஆனால் காவலில் விசாரணை தேவையா என்பது சிறப்பு நீதிமன்றத்தால் முடிவு செய்யப்பட வேண்டும். கைது செய்வதற்கான சட்டரீதியான உரிமையை உச்சநீதிமன்றத்தால் குறைக்க முடியாது. இதுபோன்ற கைதுகளைச் செய்வதற்கு உயர் அதிகாரிகளுக்கு மட்டுமே சட்டத்தின் கீழ் அதிகாரம் உண்டு.அவர்களை கைது செய்ய எழுத்துப்பூர்வமாக பதிவுசெய்யப்பட்ட காரணங்கள் இருக்க வேண்டும், இந்த வழக்கில் எங்களிடம் காரணங்கள் உள்ளது என்று எஸ்.ஜி. மேத்தா கூறினார்.