மாஜி சிறப்பு டிஜிபிக்கு 3 ஆண்டு தண்டனை... உடனே ஜாமீனும் வழங்கிய நீதிமன்றம் - முழு விவரம்!
Ex Special DGP Rajesh Das Case: முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்மீதான பாலியல் தொல்லை வழக்கில் விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. மேலும், ராஜேஷ் தாஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு மீது உத்தரவு பிறப்பித்தது.
Ex Special DGP Rajesh Das Case: முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21ஆம் தேதி, டெல்டா மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அவரது பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணிக்கும் பணியில் அப்போதைய சட்டம்-ஒழுங்கு சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அவர் பாதுகாப்பு ஆலோசனை என்ற பெயரில் பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து அந்த பெண் ஐபிஎஸ் அதிகாரி அளித்த புகாரின் பேரில் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இந்த புகார் தொடர்பாக சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மற்றும் அவரது உத்தரவின்படி பெண் ஐபிஎஸ் அதிகாரியை மிரட்டி கார் சாவியை பறித்த செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் விழுப்புரம் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இரு தரப்பு வாதங்கள்
இவ்வழக்கில் அரசு தரப்பில் சாட்சிகளாக சேர்க்கப்பட்ட 68 சாட்சிகளின் விசாரணை கடந்த ஏப்ரல் மாதம் 13ஆம் தேதியன்று நிறைவடைந்தது. தொடர்ந்து இவ்வழக்கில் இருதரப்பு வாதங்கள் முடிந்த நிலையில் அதன் விவரங்களை இரு தரப்பு வக்கீல்களும் எழுத்துப்பூர்வமாக சமர்பிக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும் படிக்க | செந்தில் பாலாஜி உடல்நிலை குறித்து காவேரி மருத்துவமனை அறிக்கை...
அதனை தொடர்ந்து, அரசு தரப்பு வக்கீல்கள் வைத்தியநாதன், ரவிச்சந்திரன் ஆகியோர் தங்கள் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதங்களை 61 பக்கங்களில் நீதிபதி புஷ்பராணி முன்னிலையில் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்தனர். அதன் பிறகு முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் தரப்பில் வக்கீல் ரவீந்திரனும், செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு தரப்பில் வக்கீல் ஹேமராஜனும் நேரில் ஆஜராகி தங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்ட வாதங்களை தாக்கல் செய்தனர்.
தீர்ப்பு விவரம்
இதையடுத்து இவ்வழக்கை விசாரித்த தலைமை குற்றவியல் நீதிபதி புஷ்பராணி, ஜூன் 16ஆம் தேதியான இன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று கடந்த 12ஆம் தேதி அறிவித்திருந்தார். இந்த வழக்கில், முன்னாள் சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் குற்றவாளி என விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்பில் மூன்றாண்டு சிறை தண்டனையும், பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. அவருக்கு துணையாக இருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட அப்போதைய செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு 500 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
ஒரு மாதம் அவகாசம்
முன்னாள் சிறப்பு டிஜிபிக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அவரது தரப்பு வழக்கறிஞர்கள் ஜாமீன் கோரி மனு அளித்திருந்தனர். இந்த மனு மீது விசாரணை மேற்கொண்ட நீதிபதி புஷ்பராணி, டிஜிபி ராஜேஷ் தாஸிற்கு, நீதிமன்றம் ஜாமீன் வழங்கி ஒரு மாதத்தில் மேல்முறையீடு செய்ய கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளது. தண்டனை வழங்கி சிறிது நேரத்திலேயே ஜாமீன் வழங்கியும், மேல்முறையீடு செய்ய கால அவகாசம் அளித்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | ஆளுநர் ஆர்.என்.ரவி முதலமைச்சர் அதிகாரத்தில் தலையிட அதிகாரமில்லை - வைகோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ