இனி யாருக்கும் இடம் இல்லை: தேமுதிக குறித்த குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த ஸ்டாலின்
கூட்டணி இறுதி செய்யப்பட்டது. 20 தொகுதிகளில் திமுக போட்டியிடும் என மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
நேற்று தேமுதிகவைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர்களான அனகை முருகேசன் மற்றும் இளங்கோவன் ஆகியோர் திமுக தொகுதிப் பங்கீட்டுக் குழு தலைவர் துரைமுருகனை சந்தித்துப் கூட்டணி குறித்து பேச்சுவாரத்தை நடத்தியதோடு, தேமுதிகவுக்கு குறிப்பிட்ட இடங்களை ஒதுக்கவேண்டும் எனக்கூறியதாக தெரிகிறது. இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் குழப்பத்தை ஏற்ப்படுத்தியது. தேமுதிக யாருடன் கூட்டணி அமைக்க விரும்புகிறது. அதிமுகவுடனா இல்லை திமுகவுடனா? என்ற குழப்பம் ஏற்பட்டு உள்ளது.
இந்த குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவும், திமுகவின் நிலைப்பாடு குறித்தும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் தெளிவுப்படுத்தி உள்ளார். அதில், மக்களவைத் தேர்தலில் திமுக 20 தொகுதிகளில் போட்டியிடும். மற்ற 20 தொகுதிகள் தோழமைக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த 40 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற தொண்டர்கள் அயராது உழைக்க வேண்டும்.
மக்களவை தேர்தலுக்கான தொகுதி உடன்பாடு குறித்து எந்த பேச்சுவார்த்தையும் திரைமறைவில் நடக்கவில்லை. திறந்த மனதுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. தலைவர் கருணாநிதி எப்படி வெளிப்படையாக செய்வாரோ, அதே நடைமுறைப்படி தான் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு குறித்து இறுதி முடிவு செய்யப்பட்டது எனக் கூறியுள்ளார்.
இந்த கடிதம் மூலம் தேமுதிகவுக்கு திமுக கூட்டணியில் இடம் இல்லை என்று தெளிவாக, அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.