மேகதாதுவில் புதிய அணை கட்டுவதது தொடர்பாக தமிழகம், கர்நாடகாவிற்கு இடையே பரபரப்பு சூழ்நிலை நிலவி வரும் நிலையில் இன்று டெல்லியில் காவிரி ஆணையம் கூட்டம் நடைபெறுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இக்கூட்டத்தில் மேகதாது பிரச்சனை குறித்து விவாதிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


காவிரி நீர் பங்கிட்டு வழங்குவதை கண்காணிப்பதற்காக, மத்திய நீர்வளத்துறை ஆணையர் தலைமையில், காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகம், கர்நாடகா, புதுச்சேரி மற்றும் கேரள மாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகள் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர்.


இதற்கிடையில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் சுமார் 5,912 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அணை கட்டுவதற்கான பணியில் கர்நாடக அரசு தீவிரமாக செயல்பட்டு வருகின்றது. இதற்கான ஆரம்பகட்ட ஆய்வு நடத்த கர்நாடகா அரசின் சார்பில் மத்திய நீர்வளத்துறை ஆணையத்திடம் அனுமதி கோரப்பட்டது, அணைகட்ட தமிழகம் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், ஆய்வறிக்கை தயாரிக்க கர்நாடக அரசுக்கு, மத்திய அரசு அனுமதி வழங்கியது.


இதைத்தொடர்ந்து மேகதாது அணை விவகாரம் தொடர்பாக, தமிழக அரசு, உச்சநீதிமன்றத்தில் முறையிட்டது. இவ்வழக்கு தொடர்பாக, தமிழக அதிகாரிகள் மற்றும் வழக்கறிஞர்கள் குழு, டெல்லியில் முகாமிட்டுள்ளன.


இத்தகைய பரபரப்பான சூழலில் காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையக் கூட்டம், அதன் தலைவர் மசூத் ஹூசேன் தலைமையில் டெல்லியில் இன்று நடைபெற உள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்புக்குப்பின் காவிரியில் கர்நாடக அரசு திறந்துவிட்ட நீரின் அளவு, இரு மாநில அணைகளில் உள்ள நீர் இருப்பு விவரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.


இன்று நடைப்பெறும் இக்கூட்டத்தில் மேகதாது அணை விவகாரத்தில் ஆய்வுக்கு அனுமதி கொடுத்தது குறித்து கேள்வி எழுப்ப தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.