புயல் பாதிப்பு விவகாரத்தில் எதிர்கட்சிகள் ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும்: அமைச்சர்
கஜா புயலால் பாதிப்படைந்த பகுதிகளில் நிவாரணப்பொருட்களை வழங்குவதில் எதிர்கட்சிகள் ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
கடந்த நவம்பர் 15-ஆம் தேதி தமிழகத்தை தாக்கிய கஜா புயல் தமிழகத்தின் திருவாரூர், தஞ்சை, நாகை, கடலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களை மிக மோசமாக சிதைத்துள்ளது. கஜா புயலில் ஆடு, மாடு மற்றும் பொதுமக்கள என பலர் பலியாகினர். இந்த கோர தாண்டவத்தில் சுமார் 1,70,000 மரங்கள், 1,17,000-க்கும் அதிகமான வீடுகள் சேதமாகின. நிவாரண பணிகளுக்காக தமிழக அரசு ரூ.1000 கோடி ஒதுக்கியது. நிவாரணப் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகின்றன.
கஜா புயலில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரமும் வழங்கப்படும் என்றும், உயிர் இழந்த மாடுகளுக்கு தலா ரூ.30 ஆயிரமும், ஆடுகளுக்கு ரூ.3 ஆயிரமும் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.
ஆனால் கஜா புயல் பாதித்த பகுதிகளை பார்வையிடவும், பாதிப்படைந்த மக்களை சந்திக்கவும் செல்லவில்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கண்டனங்கள் எழுந்தது.
இதனையடுத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள், ஹெலிகாப்டர் மூலம் புயல் சேத பகுதிகளை பார்வையிட்டனர். இச்சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்ப்படுத்தியது. கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களை சாலை வழியாக சென்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறாமல், ஹெலிகாப்டரில் பறந்தப்படி பார்வையிடுவதா? என கேள்விகள் எழுப்பட்டன. மேலும் மக்களை நேரில் சந்திக்க தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பயப்படுகிறார் என்ற குற்றம்சாட்டி அவர்மீது வைக்கப்பட்டது. மேலும் இந்த விவகரம் பெரும் விவாதத்திற்கு உள்ளாகி உள்ளது.
இதுக்குறித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார், "புயல் பாதிப்புகளை ஹெலிகாப்டரில் சென்று முதலமைச்சர் பார்வையிட்டது அவரது வசதிக்காக அல்ல, மக்களுக்காகவே. ஹெலிகாப்டரில் மாண்புமிகு முதல்வர் சென்று பார்வையிட்டதால்தான், பாதிப்புகளை விரைந்து கணக்கிட்டு பிரதமரிடம் அறிக்கை தாக்கல் செய்ய முடிந்தது. தமிழக அரசு எதிர்க்கட்சிகள் குறை சொல்லாமல் ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும்.
புயல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய தமிழகத்திற்கு உடனடியாக மத்திய குழுவை அனுப்புவது, மாண்புமிகு பிரதமர் மோடி அவர்கள் தமிழகத்தின் மீது கொண்டுள்ள அக்கறையை காட்டுகிறது". இவ்வாறு கூறினார்.