கடந்த வாரம் சென்னையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார், டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி ஆகியோர் வீடுகளில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர். இதையடுத்து அவர்கள் 3 பேரையும் நேரில் ஆஜராக வருமான வரித்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பினார்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தநிலையில், தனக்கு வருமான வரித்துறை அனுப்பிய சம்மனை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் துணைவேந்தர் டாக்டர் எஸ்.கீதாலட்சுமி மனு தாக்கல் செய்துள்ளார். அதில்:-


என் கணவர் சுகுமார் டாக்டராக உள்ளார். துணைவேந்தர் பதவியை ஏற்பதற்கு முன்பு நான், தமிழ்நாடு மருத்துவ கல்வி இயக்குனராக பணிபுரிந்தேன். கடந்த 7-ந்தேதி காலை 6.30 மணியில் இருந்து 8-ந்தேதி காலை 6.30 மணி வரை வருமான வரித்துறையினர் சாலிகிராமத்தில் உள்ள எனது வீடு, பல்கலைக்கழகத்தில் உள்ள எனது அலுவலகத்தில் திடீரென சோதனை நடத்தினர்.


வருமான வரித்துறைச்சட்டம் பிரிவு 131-ன்படி வருமானவரித்துறை துணை இயக்குனர் எனக்கு கடந்த 7-ந்தேதி ஒரு சம்மன் அனுப்பியுள்ளார்.


அதில், ‘ஏப்ரல் 10-ந் தேதி (நேற்று) காலை 11.30 மணிக்கு வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராக வேண்டும்’ என்று எனக்கு உத்தரவிட்டுள்ளார். ஆனால், என்னால் நேரில் ஆஜராக முடியாது என்று கூறியதால், வருகிற 12-ந்தேதி நேரில் வரவேண்டும் என்று வருமானவரித்துறை துணை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். ஆனால், என்னை நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட துணை இயக்குனருக்கு அதிகாரம் கிடையாது.


என் வீடு, அலுவலகத்தில் ஏப்ரல் 7 மற்றும் 8-ந் தேதிகளில் சோதனை நடந்தது. இந்த சோதனை முடிவதற்கு முன்பே, ஏப்ரல் 10-ந்தேதி நேரில் ஆஜராகவேண்டும் என்று 7-ந்தேதியே சம்மன் அனுப்பியுள்ளனர். இது சட்டப்படி செல்லாது.


மேலும், அந்த சம்மனில் எதற்காக நேரில் ஆஜராக வேண்டும் என்று எதுவும் குறிப்பிடவில்லை. இதனால் அந்த சம்மனை ரத்து செய்யவேண்டும். எனக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தடை விதிக்க வேண்டும்.


இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.