கிசுகிசு : சினிமா வாரிசு அரசியல் என்ட்ரி தெரிந்ததும் வலை வீசும் ஆலோசகர், இயக்குநர்...!
Gossip : சினிமா வாரிசு அரசியல் என்ட்ரி உறுதியானதும் பதற்றத்தில் இருக்கும் கட்சிக்கு தலைமை வகிக்கும் இயக்குநரும், பலருக்கு ஆலோசனை வழங்கிய ஆலோசகரும் அவருக்கு வலைவீச தொடங்கியிருக்கிறார்கள். இதற்கு பின்னணி காரணம் இருக்கு.
’வாப்பா, குசும்பா... கோட்டை தகவலை சொல்லிட்டு வேகவேகமாக கிளம்பினையே எங்க போன?’ என டீ மாஸ்டர் கேட்க, ‘ அதுவாண்ணே... சினிமா வாரிசுக்கு தூதுவிடும் இயக்குநர பத்தியும், பல பேருக்கு ஆலோசனை வழங்கின அந்த ஆலோசகர பத்தியும் கொஞ்சம் விசாரிச்சுட்டு வர்றப்போனேன்’ என்றான் குசும்பன். ‘ என்ன மேட்டரு கிடைச்சுச்சா’ என மாஸ்டர் ஆவலோடு கேட்க, முதலில் இயக்குநர் பத்தி சொல்ல ஆரம்பித்தான் குசும்பன். ’ அண்ணே, கட்சிக்கு தலைமை பொறுப்பு வகிக்கும் இயக்குநர் இப்போது கொஞ்சம் பதற்றத்துல தான் இருக்கிறாராம். அதற்கு முக்கிய காரணம் சினிமா வாரிசின் அரசியல் என்ட்ரி. மேடை எல்லாம் போராளி, போர் என வீர வசனம் பேசினாலும் தேர்தல் களத்துல அவரால இன்னும் சாதிக்க முடியலையே அப்படிங்கிற வேதனை அவருக்குள்ள இருக்கு. அடுத்துவர கோட்டை தேர்தலிலாவது எப்படியும் வெற்றி பெற வேண்டும் என்ற ஆசையில் இருந்தவருக்கு, அதிர்ச்சி கொடுக்கிறமாதிரி அரசியல் என்ட்ரி அறிவிச்சிட்டாரு சினிமா வாரிசு’.
மேலும் படிக்க | கிசுகிசு : சினிமா வாரிசு பக்கம் இணைய ரெடியாகும் பெரிய தலைகள்..! அவரும் வர்றாமே?
‘ சினிமா வாரிசு வர்றதுக்கும், அவரு அதிர்ச்சியாவதறதுக்கும் என்னப்பா சமாச்சாரம்?’ என டீ மாஸ்டர் கேட்க, அடுத்த பாயிண்டை ஆரம்பித்தான் குசும்பன். ’ அண்ணே இவ்வளவு நாள் இளசுகளை நம்பி தான் அந்த இயக்குநர் கட்சி நடத்திட்டு இருந்தாரு. கணிசமான வாக்குகளும் அவருடைய பேச்சைக் கேட்டு அவரு நடத்துற கட்சிக்கு போச்சு. ஆனால், இனி அப்படி நடக்காது. ஏன்னா? சினிமா வாரிசும் இவரு டார்கெட் பண்ணி வச்சிருக்கிற இளசுகள் வாக்குகளை தான் குறி வச்சிருக்கிறாரு. கூடவே அவருக்கு சினிமா பிரபலம், கல்வி விருது நிகழ்ச்சி நடத்தி எல்லாம் நல்ல பேரு வாங்கி வச்சிருக்கிறதால, அரசியல் என்டிரி அதிகாரப்பூர்வமா வந்ததும் அவரு பக்கம் இளசுகள் திரண்டுவிடும். இதனால் இயக்குநர் கூடராம், ஒருமுறையாவது ஜெயிச்சு கோட்டைகுள்ள போகணும் அப்படிங்கிற கனவெல்லாம் நொறுங்கிப்போகவும் வாய்ப்பு இருக்கு. அதனை முன்கூட்டியே தெரிஞ்சுக்கிட்ட இயக்குநர், இப்போதே ‘என் தம்பி... என் தம்பி’ ணு சொந்தம் கொண்டாடிட்டு இருக்கிறாரு.
எப்படியாவது சினிமா வாரிசுகூட சேர்ந்துவிடனும் அப்படிங்கிறது தான் அவரோ ஆசை. அதனை வெளிப்படையாவும் தெரிவித்துவிட்ட இயக்குநர், சினிமா வாரிசுவின் என்டிரியில் தன்னோட கட்சி கரைஞ்சு போயிரக்கூடாதுங்கிறதுக்காக இப்போது இருந்தே கொக்கி போட்டுவிச்சு, அவரோட அரசியல் வருகையின்போது தானும் கொஞ்சம் மைலேஜ் தேத்திக்கிலாம்னு பார்க்கிறாரு. இதற்கு சினிமா வாரிசு தனக்கு சப்போர்ட் பண்ணுவாருனு பெரிசா எதிர்பார்க்கிறாரு. அதனால் கிடைக்கிற கேப்பில் எல்லாம் சினிமா வாரிச பெருசா புகழ்ந்துகிட்டு இருக்கிறாரு கட்சி நடத்தும் இயக்குநர்.’ என்றான் குசும்பன்.
‘ஏம்பா, கொஞ்ச நாட்களுக்கு முன்ன தான் சினிமா வாரிசின் அரசியல் வருகை குறித்தெல்லாம் அந்த இயக்குநர் கடுமையாக விமர்சிச்சாரே?’ என டீ மாஸ்டர் கேட்க, ‘அண்ணே, சினிமா வாரிசு அரசியலுக்கு எல்லாம் வர்ற மாட்டாருங்கிற நினைப்புல இயக்குநர் பேசிட்டாரு. இப்போ வர்றது உறுதியானதும் அவர தன்கூட எப்படியாவது சேர்த்துக்கிடனும்ங்கிற முடிவுல இருக்கிறாரு. இதுக்காக, தனக்கு இருக்கிற அரசியல் அனுபவம், பட்ட கஷ்டங்கள், கள நிலவரம் உள்ளிட்ட எதார்த்த அரசியல் களம் குறித்து சினிமா வாரிசுகிட்ட விலாவரியா பேசியும் இருக்கிறாரு அந்த இயக்குநர். அதுமட்டும் இல்ல, தனக்கு தெரிஞ்சவங்க வழியாகவும் சினிமா வாரிச தனக்கு ஆதரவா செயல்பட சொல்லுங்கனு தூதும் விடுறாராம்.’ என்றான் குசும்பன்.
மேலும் படிக்க | கிசுகிசு : முதன்மையானவரின் கடுகடுப்பு.... காக்கிகளுக்குள் நடந்த அதிரடி மாற்றம்..!
‘தேர்தல் அரசியல்ல வெற்றி தான் முக்கியம், அது இருந்தா தான் பேசுற கொள்கைளை நடைமுறைக்கு கொண்டுவர முடியும். இவ்ளவு நாள் கட்சி நடத்தியும் அப்படி வெற்றி பெற அளவுக்கு எந்த வளர்ச்சியும் அவருடைய கட்சி அடையலையே, இத்தனைக்கும் இவ்வளவு சமூக ஊடக பலம் இருந்தும் அவரு கட்சி ஏன் ஜெயிக்க முடியலை? அவரே ஜெயிக்கலையேப்பா?’ என டீ மாஸ்டர் அடுத்த கேள்வியை போட்டார். குசும்பன் உடனே, ’அண்ணே, அவரு இயக்குநர் நினைப்புலையே கட்சி நடத்த விரும்புறாரு. அவர நம்பி வந்த பலரும் இப்போது கூட இல்ல. கட்சிக்குள்ள புது பேட்ச், பழைய பேட்ச் என ஆட்கள் வருவதும் போவதுமாக இருக்கிறாங்க. இப்படியே இருந்தால் ஒரு கணிசமான ஓட்டுகளை வாங்க முடியுமே தவிர வெற்றி பெற எல்லாம் வாய்ப்பே இல்லை. நீங்க சொன்ன மாதிரி சமூக ஊடகத்தில வலிமையாக இருக்கிறாங்க. ஆனால் அதை வச்சி ஒரு நரேடிவ் மட்டும் தான் செட் பண்ண முடியுமே தவிர, கள அரசியலில் வெற்றி பெற எல்லாம் முடியாது என்கிற எதார்த்ததுக்கு இயக்குநர் இன்னும் வரல.
அதனால், அடுத்த தேர்தல்ல ஏதோ ஒன்னு ரெண்டு வெற்றியையாவது சினிமா வாரிசு கூட இருந்து தேத்தலாம்னு விரும்புறாரு அவரு. ஆனால், சினிமா வாரிசு பிளானே வேற. அதை அப்புறம் விலாவரியா சொல்றேன். அதுக்கு முன்னால ஒரு ஆலோசகர் தூது விடுறாருன்னு சொன்னனேன் இல்ல, அவரு வேற யாரும் இல்ல, ஸ்டார் நடிகருக்கு ஆலோசகரா போய் இப்போ பூ கட்சியோட ஐக்கியமான அந்த மணியானவரே தான். அவரோட ஃபோகஸ் இப்போ சினிமா வாரிசு மேல திரும்பியிருக்கு. ஏதாவது வாய்ப்பு கிடைச்சா அவரோட ஐக்கியமாகலாம்னு நினைக்கிறாரு. இதையெல்லாம் கவனிச்சிட்டு இருக்கிற சினிமா வாரிசு நான் ஏற்கனவே சொன்ன மாதிரி வேறொரு பிளானோட இருக்கிறாரு. அதுக்கான சமயம் வரும்போது சொல்றேன்’ என சொல்லிட்டு கிளம்பினான் குசும்பன்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ