காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு உதவியாக மருத்துவக்குழுகளை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக தலைமைச்செயலர் சண்முகம் தெரிவித்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அத்திவரதர் வைபவம் கடந்த ஜூலை 1 முதல் நடைபெற்று வருகின்றது. வரும் ஆகஸ்ட் 17 வரை இந்த வைபவம் நடைபெறுகிறது.


அத்திவரதரை காண தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் அத்திவதரை தரிசிக்க வருபவர்களுக்கு தேவையான வசதிகள் செய்து தருவது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 


கூட்டத்திற்கு பின்னர் காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தலைமைச்செயலாளர் சண்முகம் அத்திவரதரை காண வரும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக பேட்டரி வாகனங்களை முறையாக இயக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. மருத்துவ குழுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 


தளர்ச்சியுடன் வரும் முதியவர்களுக்கு பழச்சாறு அளிக்கப்படும், பக்தர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்ந்து கண்காணிக்கப்படும். அத்திவரதர் உற்சவத்திற்கு பக்தர்களின் வருகை அதிகரிப்பால் கூடுதலாக கூடாரம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.


இதேப்போன்று துப்புறவு தொழிலாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் ஊர்காவல் படையை சேர்ந்த 1000 பேர் பக்தர்களை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபடுவர் எனவும், முக்கிய தினங்களில் தரிசனத்தை காலை ஒரு மணி நேரம் முன்னதாக துவக்க முடியுமா என்பது பற்றியும் ஆலோசித்து வருகிறோம் எனவும் தெரிவித்துள்ளார்.