உருளை ஆராய்ச்சி நிறுவனம்; மூடும் முடிவை அரசு கைவிடவேண்டும்!
ஊட்டி உருளை ஆராய்ச்சி நிறுவனத்தை மூடும் முடிவை அரசு கைவிட வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்!
ஊட்டி உருளை ஆராய்ச்சி நிறுவனத்தை மூடும் முடிவை அரசு கைவிட வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்!
இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது...
"நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகிலுள்ள முத்தொரையில் செயல்பட்டு வரும் மத்திய உருளைக்கிழங்கு ஆராய்ச்சி நிறுவனத்தை மூட இந்திய வேளாண் ஆராய்ச்சிக்குழு முடிவு செய்திருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. தமிழக விவசாயிகளுக்கு எதிரான இம்முடிவு கண்டிக்கத்தக்கது.
1957-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மத்திய உருளைக்கிழங்கு நிறுவனம் தென்னிந்தியாவில் உருளை சாகுபடியை பெருக்குவதில் மிகப்பெரிய பங்காற்றி வருகிறது. உருளைக்கிழங்கு சாகுபடியில் மிகப்பெரிய சவாலாக இருப்பது நூற்புழு தாக்குதல், இலைக்கருகல் நோய்கள் தான். உருளைக்கிழங்குச் செடிகளை இந்த நோய்கள் தாக்கினால் 80 முதல் 90% விளைச்சல் பாதிக்கப்படும். இந்த நோய்களை எதிர்க்கும் சக்தி கொண்ட குப்ரி கிர்தாரி, குப்ரி ஹிமாலினி, குப்ரி சூர்யா, குப்ரி சக்யாத்ரி ஆகிய உருளைக்கிழங்கு வகைகளை இந்நிறுவனம் உருவாக்கியுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களில் பயிரிடுவதற்கு ஏற்ற விதை உருளைக்கிழங்குகளை இந்த நிறுவனம் மட்டுமே உற்பத்தி செய்கிறது. இந்த நிறுவனம் மூடப்பட்டால் தென் மாநிலங்களில் உருளைக்கிழங்கு சாகுபடி மிக மோசமான பின்னடைவை சந்திக்கும்.
இந்தியாவில் ஊட்டி முத்தொரை, பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் ஆகிய இரு இடங்களில் தான் மத்திய உருளைக்கிழங்கு ஆராய்ச்சி நிறுவனங்கள் உள்ளன. ஊட்டியில் உள்ள உருளைக்கிழங்கு ஆராய்ச்சி நிறுவனம் மூடப்பட்டால் ஜலந்தரில் உள்ள மத்திய உருளைக்கிழங்கு ஆராய்ச்சி நிறுவனத்திலிருந்து தான் விதை உருளைக்கிழங்குகளை விவசாயிகள் வாங்கி வர வேண்டியிருக்கும். ஜலந்தரில் உற்பத்தி செய்யப்படும் விதை உருளைக்கிழங்குகள் தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களில் பயிரிட ஏற்றதாக இருக்காது. ஜம்மு-காஷ்மீர், இமாலயப் பிரதேசம், உத்தர்காண்ட் ஆகிய மாநிலங்களில் இருந்து விதை உருளைக்கிழங்குகளை வாங்க முடியும். ஆனால், அவை நூற்புழுவை எதிர்க்கும் சக்தி இல்லாதவை என்பதால் அவை தடை செய்யப்பட்டுள்ளன. இத்தகைய சூழலில் ஊட்டி மத்திய உருளைக்கிழங்கு ஆராய்ச்சி நிறுவனம் மூடப்பட்டால் தமிழகத்தில் உருளைக்கிழங்கு சாகுபடியே செய்ய முடியாத நிலை ஏற்படும். அவ்வாறு செய்தாலும் உருளைகள் பூச்சித் தாக்குதலுக்கு உள்ளாகி இழப்பு தான் ஏற்படும்.
தில்லியில் கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற இந்திய வேளாண் ஆராய்ச்சிக்குழுக் கூட்டத்தில் ஒவ்வொரு பயிருக்கும் ஒரே ஒரு ஆராய்ச்சி நிலையம் செயல்பட்டால் போதுமானது என்றும், கூடுதலாக உள்ள ஆராய்ச்சி நிறுவனங்களை மூடி விடலாம் என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இது அபத்தமானது ஆகும். இந்தியாவின் தெற்கு எல்லைக்கும் வடக்கு எல்லைக்கும் இடையிலான தொலைவு 3214 கி.மீ; கிழக்கு எல்லைக்கும், மேற்கு எல்லைக்கும் இடையிலான தொலைவு 2933 கி.மீ. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பல்வேறு தட்பவெப்ப நிலைகள் நிலவுகின்றன. அவ்வாறு இருக்கும் போது இந்தியா முழுமைக்கும் ஒரு பயிருக்கு ஒரு ஆராய்ச்சி நிறுவனம் போதுமானது என்ற முடிவை தொலைநோக்குப் பார்வை இல்லாத, புரிதல் குறைபாடு உள்ளவர்களால் மட்டுமே எடுக்க முடியும். அப்படிப்பட்டவர்களின் கைகளில் இந்திய வேளாண் ஆராய்ச்சிக்குழு இருப்பது வேளாண் வளர்ச்சிக்கு எவ்வகையிலும் உதவாது.
மத்தியில் நரேந்திரமோடி தலைமையிலான அரசு பதவியேற்ற நாளில் இருந்தே தமிழகத்தில் உள்ள மத்திய நிறுவனங்கள், குறிப்பாக வேளாண் நிறுவனங்கள் திட்டமிட்டு மூடப்படுகின்றன; அல்லது வேறு மாநிலங்களுக்கு மாற்றப்படுகின்றன. கடந்த ஆண்டு திசம்பர் மாதத்தில் கோவையில் உள்ள கரும்பு இனப்பெருக்கு நிறுவனம், திருச்சியில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி மையம், சென்னையில் உள்ள மத்திய கடல் நீர் மீன்வளர்ப்பு நிறுவனம் ஆகியவற்றை மூடுவது அல்லது வேறு மாநிலங்களுக்கு மாற்றுவது என்று இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் முடிவு செய்தது. தமிழ்நாட்டிலுள்ள மத்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனங்கள் சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில், அவற்றை வேறு இடங்களுக்கு மாற்றுவதற்கான முயற்சிகளை தமிழ்நாட்டிற்கு எதிரான நடவடிக்கைகளாகவே பார்க்க வேண்டியிருக்கிறது. அதன் தொடர்ச்சியாக உருளை ஆராய்ச்சி நிறுவனத்தையும் மூடுவதை ஒருபோதும் ஏற்க முடியாது.
தென் மாநிலங்களில் லாபகரமான உருளை சாகுபடிக்கு ஊட்டி மத்திய உருளைக்கிழங்கு ஆராய்ச்சி நிறுவனம் தான் ஆதாரம் ஆகும். எனவே, தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநில விவசாயிகளின் நலன் கருதி ஊட்டி உருளைக்கிழங்கு ஆராய்ச்சி நிறுவனத்தை மூடும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும்." என குறிப்பிட்டுள்ளார்!