ஆளுநர் - எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பு - ஆட்சி அமைக்க உரிமை கோரினார்
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் சசிகலா உள்ளிட்ட மூவரும் குற்றவாளி என்று உச்ச நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு அளித்ததுடன், அவர்களுக்கு விதிக்கப்பட்ட 4 ஆண்டு தண்டனையையும் உறுதி செய்தது. சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு ரூ10 கோடி அபராதத்தையும் உறுதி செய்தது உச்சநீதிமன்றம். சிறை தண்டனை வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, சசிகலா 10 வருடங்கள் தேர்தலில் நிற்கமுடியாது நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று காலை தீர்ப்பு வெளியானபோது கூவத்தூர் விடுதியில் எம்.எல்.ஏ.க்களுடன் தங்கியிருந்த சசிகலா, மாற்று ஏற்பாடுகளை செய்யத் தொடங்கினார். அவரது முன்னிலையில், சட்டமன்ற கட்சி தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டார். இதுபற்றி ஆளுநருக்கு கடிதமும் அனுப்பப்பட்டது. இதையடுத்து, கவர்னரை எடப்பாடி பழனிச்சாமி நேரில் சந்திக்க நேரம் ஒதுக்கி தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.
மாலை 5.30 மணிக்கு அவரை சந்திக்க ஆளுநர் நேரம் ஒதுக்கி தந்தார். இதையடுத்து, மாலை 3.45 மணியளவில் கூவத்தூரில் இருந்து எடப்பாடி பழனிச்சாமி ஆளுநரை சந்திப்பதற்காக சென்னை புறப்பட்டார். அவருடன் அமைச்சர் ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், பொள்ளாச்சி ஜெயராமன் உள்பட 11 பேர் சென்னைக்கு வந்தனர்.
எடப்பாடி பழனிச்சாமி உள்பட மொத்தம் 12 பேரும் கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்தனர். தன்னை சட்டமன்ற கட்சி தலைவராக தேர்வு செய்தது தொடர்பான கடிதத்துடன், தனக்கு ஆதரவு அளிக்கும் அதிமுக எம்.எல்.ஏ.க்களின் பட்டியலை கவர்னரிடம் அளித்த எடப்பாடி பழனிச்சாமி, ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கும்படி கேட்டுக்கொண்டார்.
இதைத் தொடர்ந்து ஆளுநர் மாளிகையில் இருந்து எடப்பாடி பழனிச்சாமி வெளியேறினார். ஆனால் எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சி அமைக்க அழைக்கவில்லை என ஆளுநர் அலுவலகத்திலிருந்து தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் மாலை 6 மணிக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஆளுநரை சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது.