ஆய்வு மேற்கொள்ள ஆளுநருக்கு அதிகாரம் உண்டு; ஆளுநர் மாளிகை விளக்கம்!
தமது ஆட்சி வரம்பிற்குட்பட்ட மாநிலத்தின் உண்மை நிலையை அறிந்து வைத்திருப்பது ஆளுநரின் கடமை எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தமிழகத்தில் பல பகுதிகளில் சென்று ஆய்வு பணிகளை மேற்கொண்டார். இதற்கு பல்வேறு கட்சிகளிடம் இருந்து எதிர்ப்புகள் வந்தன. எனினும், அரசியல் சட்டத்தின்படியே ஆய்வு நடத்தப்படுகிறது என ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.
அரசியலமைப்புச் சட்ட வரம்புக்குட்பட்டே தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அதிகாரிகளுடன் ஆய்வு நடத்துவதாக ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
அரசியல் சாசனத்தில் ஆளுநருக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களை விரிவாக பட்டியலிட்டுள்ள ஆளுநர் மாளிகை, சில சூழ்நிலைகளில் ஆளுநர் அமைச்சரவையின் ஆலோசனை இல்லாமல் சுயமாக செயல்படமுடியும் என தெரிவித்துள்ளது.
இதுபற்றி வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், இந்திய அரசியல் சாசனத்தின்படி ஒரு மாநிலத்தின் நிர்வாக தலைமையில் இருப்பவர் கவர்னர் தான். மாநில நிர்வாகத்தின் அனைத்து தரப்பு தகவலையும் பெறுவதற்கு அவருக்கு முழு அதிகாரம் உள்ளது. அதுபோல மாநிலத்தின் அனைத்து பகுதிகளுக்கும் செல்வதற்கு அவருக்கு தடை கிடையாது.
அரசியல் சட்டத்தின்படியே ஆய்வு நடத்தப்படுகிறது. அரசியல் சாசன அதிகாரம் கொண்ட கவர்னரின் அலுவலகத்தை மரியாதை குறைவாக பேசுவது சட்டப்படி தவறாகும் என ஆளுநர் மாளிகை தகவல் தெரிவித்துள்ளது.
தமது ஆட்சி வரம்பிற்குட்பட்ட மாநிலத்தின் உண்மை நிலையை அறிந்து வைத்திருப்பது ஆளுநரின் கடமை எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. அரசின் திட்டங்களையும், கொள்கைகளையும் செயல்படுத்த நிர்வாகம் எடுத்துக்கொள்ளும் முயற்சிகளை பல்வேறு மாவட்டங்களை ஆய்வு செய்வதன் மூலம் அறிந்துகொள்ளமுடிவதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆளுநர், மக்களின் நலனுக்காக செயல்பட்டு வருவதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.