சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு சென்ற, சென்னையைச் சேர்ந்த 50 வயதுக்குட்பட்ட பெண்கள் 11 பேர் கொண்ட குழு இன்று அதிகாலை பம்பையில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தடுத்து நிறுத்தப்பட்ட பெண்கள் சபரிமலையில் தரிசனம் செய்யாமல் திரும்பமாட்டோம் என சுமார் 9 மணி நேரத்திற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் சபரிமலை சென்றுள்ள பெண்கள் உண்மையான பக்தர்களா? என பாஜக தேசிய செயலாளர் H ராஜா அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்.


இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது...



"தமிழகத்திலிருந்து சென்ற ஐயப்ப பக்தர்கள் பம்பையிலிருந்து திரும்ப அனுப்பப்பட உள்ளனர். செய்தி.


இவர்கள் ஐயப்ப பக்தர்களா? எவருடைய நெற்றியிலும் சந்தன குங்குமப் பொட்டு இல்லை. போலி பக்தர்கள், போராளிகள் திரும்ப அனுப்பப் பட்டது சரியே. சாமி சரணம்" என பதிவிட்டுள்ளார்.


சென்னையைச் சேர்ந்த “மனிதி” எனும் பெண்கள் நல அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் செல்வி தலைமையில் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் 11 பேர் சபரிமலைக்கு நேற்று பயணம் மேற்கொண்டனர். சென்னையில் இருந்து தமிழக எல்லையான கம்பம்மேடு, இடுக்கி வழியாகப் பம்பைக்கு இன்று காலை 3.30 மணியளவில் இந்த குழு சென்றுள்ளது. இக்குழுவின் வருகையினை அறிந்த கேரள இந்து அமைப்பினர் கோட்டயம் ரயில் நிலையத்தில் இரவு முழுவதும் காத்திருந்து, “மனிதி” குழுவினரை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.


இதுகுறித்து விவரம் அறிந்த காவல்துறையினர், பம்பையில் “மனிதி” குழுவினரை நிறுத்தி பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு அவர்களை திரும்பிச் செல்லுமாறு கூறியுள்ளனர். ஆனால், உச்ச நீதிமன்ற தீர்ப்பைச் சுட்டிக்காட்டி, மனிதி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் செல்வி, சாமி தரிசனம் செய்யாமல் திரும்பமாட்டோம் என்று தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக இப்பகுதியில் பதற்றம் அதிகமாகியுள்ளது.


பயணம் மேற்கொண்டுள்ள “மனிதி” குழுவில் 8 பேர் முறைப்படி விரதம் இருந்து இருமுடி கட்டிச் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், தமிழக பெண்களை தவிர கேரளா, மத்தியப் பிரதேசம், ஒடிசா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த பெண்களும் இந்த குழுவில் இணைந்து சென்றுள்ளதாக தெரிகிறது.