கடந்த 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் ஒரே நாடு, ஒரே வரி வசூலிக்கும் வகையில் ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு  அமல்படுத்தியது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில், ஜிஎஸ்டி வரி தொடர்பான விளக்கக்கூட்டம் சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு அரங்கில் நேற்று நடந்தது. இதில், பல்வேறு தொழில் வர்த்தக சங்கங்களின் நிர்வாகிகள், தொழில் அதிபர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கலந்து கொண்டு பேசினார்.


அப்போது அவர் பேசியது:-


நாட்டின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு ஜிஎஸ்டி கொண்டுவரப்பட்டு இருக்கிறது. நாட்டின் வளர்ச்சிக்காக பல கடினமான முடிவுகளை எடுக்கும்போது பல்வேறு எதிர்ப்புகளை சந்திக்க வேண்டியது உள்ளது. 


ஒவ்வொரு மாநிலங்களிலும் ஒவ்வொரு விதமான வரி வசூலிக்கப்பட்டு வந்தது. அதாவது நாடு முழுவதும் 17 விதமான வரி வசூலிக்கப்பட்டு வந்தது. இதன் காரணமாக வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்தனர். ஜிஎஸ்டி-யை அமல்படுத்தும்போது மாநிலங்களின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படும் என்ற கருத்து இருந்தது. அதை முறியடித்து ஒரே நாடு, ஒரே வரி என்பதை நிறைவேற்றி உள்ளோம்.


ஜிஎஸ்டி வரியின் மூலம் அந்தந்த மாநிலங்களில் ஏற்கனவே இருந்து வந்த வரியை வசூலிப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த சுங்கச்சாவடிகள் அகற்றப்பட்டுள்ளன. இதன்மூலம் பொருட்கள் வேகமாக ஒரு மாநிலத்தில் இருந்து இன்னொரு மாநிலத்துக்கு எடுத்து செல்லப்படுகிறது. மருந்து போன்ற அத்தியாவசிய பொருட்கள் மிக விரைவாக மக்களுக்கு கிடைத்து வருகின்றன.


தொழிற்சாலைகளுக்கு தேவையான பொருட்கள் வேகமாக எடுத்து வரும்போது தொழில் உற்பத்தியும் பெருகும் நிலை ஏற்பட்டுள்ளது. 


தமிழ்நாடு, மராட்டியம் போன்ற சில மாநிலங்கள் உற்பத்தியில் சிறந்து விளங்கி வருவதால் அந்த மாநிலத்தின் வருமானம் பாதிக்கப்படும் என்று ஜி.எஸ்.டி.க்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அவ்வாறு மாநிலத்தின் வருமானம் பாதிக்கப்படும் பட்சத்தில் அதை ஈடுகட்ட உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து ஜி.எஸ்.டி. வரி தற்போது அமல்படுத்தப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி. வரி என்பது மத்திய அரசு விதித்துள்ள வரி என்பது தவறான கருத்தாகும்.


மூன்றில் இரண்டு பங்கு மாநில அரசுகளின் பிரதிநிதிகள், மூன்றில் ஒரு பங்கு மத்திய அரசின் பிரதிநிதிகள் போன்றவர்கள் இணைந்து பலமுறை நடத்திய ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுதான் ஜி.எஸ்.டி. வரி ஆகும். ஜி.எஸ்.டி. வரியால் ஏதேனும் பாதிப்பு என்றால் மாநில அரசுகள் தாராளமாக தெரிவிக்கலாம். அதுபோன்று தெரிவிக்கப்படும் கருத்துகள் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் வைக்கப்பட்டு உரிய தீர்வு காணப்படும்.


இவ்வாறு அவர் கூறினார்.