ஆணவ கொலைகளை தடுப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த, ஒரு துண்டு பிரச்சுரத்தைக் கூட தமிழக அரசு வழங்கவில்லை என சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆணவக் கொலைகள் தொடர்பாக பத்திரிகைகளில் வெளியான செய்தியை அடிப்படையாகக் கொண்டு, சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து, வழக்கை விசாரணைக்கு எடுத்து கொண்டது. அப்போது, ஆணவ கொலைகளை தடுப்பது மற்றும் தீர்வு காண்பது தொடர்பாக உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.


இதையடுத்து, இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசுத்தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஆணவ கொலைகள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் சிறப்பு பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், சமூக நலத்துறையின் கீழ் சிறப்பு பிரிவு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.


இந்த அறிக்கை குறித்து அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், தமிழகம் முழுவதும் 1300 காவல் நிலையங்கள் இருப்பதாகவும், அனைத்து காவல் நிலையங்களிலும் சிறப்பு பிரிவு அமைப்பது என்பது சாத்தியமில்லாதது எனவும் தெரிவித்தனர். ஆணவ கொலைகள் தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒரு துண்டு பிரசுரம் கூட வெளியிடப்படவில்லை என குறை கூறிய நீதிபதிகள், வழக்கு தொடர்பாக அரசு வழக்கறிஞருக்கு அறிவுறுத்தல்கள் வழங்க உதவியாளரை அனுப்பி வைத்ததற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். 


பின்னர், இந்த அறிக்கையை தாக்கல் செய்த உதவி IG-யை, நாளை நேரில் ஆஜராக உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.