பிகில் திரைப்படக் கதைக்கு காப்புரிமை கோரி வழக்கு தொடர உயர்நீதிமன்றம் அனுமதி!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நடிகர் விஜயின் பிகில் திரைப்படத்துக்கு எதிராக உரிமையியல் வழக்கு தொடர உதவி இயக்குநர் கே.பி.செல்வாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. பிகில்  படத்தின் கதை தன்னுடையது எனக் கூறி, உதவி இயக்குனர் செல்வா என்பவர் தாக்கல் செய்த வழக்கு, உயர்நீதிமன்றத்தில் நீதிபதி சுரேஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, இயக்குனர் அட்லி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், பிகில் படத்தின் கதை, 2018 ஜூலையில் பதிவு செய்யப்பட்டது எனவும், ஆனால் மனுதாரர் தன் கதையை 2018 அக்டோபரில் தான் பதிவு செய்துள்ளார் எனவும் வாதிட்டார்.


படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர்  காப்புரிமை மீறப்பட்டதாக, கீழமை நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் மனுதாரர் கூறவில்லை எனவும், பணம் பறிப்பதற்காகவும், விளம்பரத்துக்காகவும் தொடரப்பட்டுள்ள இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் கூறினார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சுரேஷ்குமார் தீர்ப்பை ஒத்திவைத்தார். இந்த வழக்கு இன்று பிற்பகல் விசாரணைக்கு வந்தது. அப்போது, பிகில் பட கதைக்கு உரிமை கோரி செல்வா தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவை பிறப்பித்த நீதிமன்றம், இந்த பட கதைக்கு உரிமை கோரிய செல்வாவின் மனுவை கீழமை நீதிமன்றம் நிராகரித்தது செல்லாது எனவும் தெரிவித்துள்ளது.


விளம்பரம் மற்றும் பணம் பறிப்பதற்காக கடைசி நேரத்தில் வழக்கு தொடர்ந்திருப்பதாகவும், பிகில் படத்துக்கு தடை எதுவும் இல்லை என்று இயக்குநர் அட்லி தரப்பு வழக்கறிஞரும், உரிமையியல் அடிப்படையில் எந்த நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது என்பது பற்றி ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று செல்வா தரப்பு வழக்கறிஞரும் கூறியுள்ளனர். இந்நிலையில், பிகில் திரைப்படக் கதைக்கு காப்புரிமை கோரி வழக்கு தொடர உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.