மதுரையில் பெய்த கனமழையில் மணி நகரம் ரயில்வே தரைப்பாலத்தில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட காரில் சிக்கிய நபர்களை காவல்துறையினர் மீட்டு உயிரை காப்பாற்றி உள்ளனர். மேலும் மூன்று மணி நேரத்திற்கு மேல் பெய்த கன மழையால் வெள்ள நீரில் ரயில்வே தரைப்பாலங்கள் மூழ்கின. மதுரை மாவட்டம் முழுவதிலும் 3 மணி நேரத்திற்கு மேலாக இடி மின்னலுடன் கூடிய கனமழை தொடர்ச்சியாக செய்து வருகிறது. மதுரை ரயில் நிலையம், ஆரப்பாளையம் அண்ணாநகர், சிம்மக்கல், மாட்டுத்தாவணி திருப்பரங்குன்றம், ஆனையூர், கோரிப்பாளையம் பழங்காநத்தம், பைபாஸ் சாலை, அவனியாபுரம் வில்லாபுரம், விமான நிலையம், திருநகர் உள்ளிட்ட மாநகர் பகுதிகளில் அதிக அளவில் பெய்த கனமழை காரணமாக சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓட தொடங்கியது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | சாதி மறுப்பு திருமணம் செய்தால் 2.5 லட்சம் நிதியுதவி - எப்படி பெறுவது?


இதில் மதுரை மணி நகரம் ஒர்க்ஷாப் ரோடு சாலை பகுதியில் அமைந்துள்ள ரயில்வே தரைப்பாலத்தில் மழை நீரானது 5 அடி உயரத்திற்கு வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடியதால் பாலத்தை கடக்க சென்ற காவல்துறை வாகனம் வெள்ளத்தில் சிக்கியது. இதனையடுத்து காவல்துறை வாகனத்தில் இருந்த காவல்துறையினர் நீந்தி தப்பினர். இதனைத் தொடர்ந்து பின்னால் வந்த மற்றொரு காரில் 3 பேருடன் வந்த கார் ஒன்று மழை வெள்ளத்தில் சிக்கிய நிலையில் அங்கு மிதந்துவந்த காவல் துறையினர் கடும் சிரமத்துடன் காரில் இருந்த மூவரையும்  பத்திரமாக மீட்டு அழைத்து வந்தனர். இதேபோன்று பாலத்தின் வழியே கடக்க சென்ற பைக்குகள், ஆட்டோக்கள், சரக்குவாகனங்கள் என  பல்வேறு வாகனங்களும் வெள்ள நீரில் சிக்கி உள்ளதால் உயிரிழப்பு ஏதும் ஏற்பட்டுள்ளதா என்ற அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர்.