தமிழகத்தில் நிரந்தர மது விலக்கு எப்போது? உயர்நீதிமன்றம் கேள்வி!
தமிழகத்தில் நிரந்தரமாக மது விலக்கு எப்போது நிறைவேற்றப்படும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது!
தமிழகத்தில் நிரந்தரமாக மது விலக்கு எப்போது நிறைவேற்றப்படும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது!
டாஸ்மாக் கடை அமைய உள்ள இடத்திற்கு 100 மீட்டருக்குள் கோவிலோ, கல்வி நிறுவனங்களோ அமைந்துள்ள இடத்திலோ அனுமதி வழங்ககூடாது என்ற விதியை மீறி தஞ்சாவூர் பள்ளிக்கரஹாரம் பேருந்து நிலையம் அருகே டாஸ்மாக் அமைக்கப்பட்டுள்ளதாக தஞ்சாவூரைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுத்திருந்தார்.
நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு இந்த வழக்கினை இன்று விசாரித்தது. விசாரணையின் முடிவில் தஞ்சாவூர் பள்ளிக்கரஹாரம் பேருந்து நிலையம் அருகே டாஸ்மாக் கடை அமைக்க தடை விதித்து உத்தரவிட்டனர்.
மேலும் இந்த வழக்கில் உள்துறை செயலாளர், டாஸ்மாக் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரை எதிர்மனுதாரராக சேர்த்து விட்டதுடன், தமிழகத்தில் 2016-ஆம் ஆண்டு துவங்கி இதுவரை எத்தனை டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளது, அதன்மூலம் கிடைக்கப்பெற்ற வருமானம் என்ன? என்ற விவரங்களை மாவட்ட வாரியாக அறிக்கையாக தாக்கல் செய்யவேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் முழுவதுமாக டாஸ்மாக் கடைகள் எப்போது மூடப்படும்? எனவும் கேள்வி எழுப்பியுள்ளது. வரும் மார்ச் 4-ஆம் நாள் டாஸ்மாக் தலைவர் நீதிமன்றத்தில் ஆஜராகி இதுகுறித்த விளக்கத்தினையும் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.