நம்பிக்கை வாக்கெடுப்பு: திமுக மனு இன்று விசாரணை
சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி முதல்வராக எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றதாக அறிவித்ததை செல்லாது என அறிவிக்கக் கோரி ஐகோர்ட்டில் திமுக முறையீடு செய்திருந்தது.
சென்னை: சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி முதல்வராக எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றதாக அறிவித்ததை செல்லாது என அறிவிக்கக் கோரி ஐகோர்ட்டில் திமுக முறையீடு செய்திருந்தது.
கடந்த சனிக்கிழமை தமிழக சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றார். இந்த, நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என்று அறிவிக்கக் கோரியும் திமுக எம்எல்ஏக்கள் பேரவையில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டது குறித்தும், திமுக கட்சியின் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து, திமுக-வின் முறையீடு நேற்று அவசர வழக்காக விசாரிக்கப்படும் என்று ஐகோர்ட்டில் கூறியிருந்தது. இந்நிலையில் நேற்று இந்த மனு சென்னை ஹைகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனு இன்று (22-02-2017) விசாரிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
மனுவில் கூறியதாவது:-
தமிழக சட்டசபையில் கடந்த 18-ம் தேதி எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தியபோது, சட்டவிரோதமாகச் செயல்பட்டுள்ளது. ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று எதிர்கட்சிகளின் கோரிக்கையை சபாநாயகர் நிராகரித்துவிட்டதாகவும், அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் கூவத்தூர் விடுதியில் அடைத்துவைக்கப்பட்டு, சிறைக் கைதிகளைப் போல சட்டசபைக்கு அழைத்துவரப்பட்டதாகவும், மனசாட்சிப்படி எந்த எம்.எல்.ஏ.வும் வாக்களிக்கவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. நம்பிக்கை ஓட்டெடுப்பில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் யாரும் கலந்துகொள்ளக்கூடாது என்று திட்டமிட்டு, எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக சபாநாயகர் தன்னிச்சையுடன் செயல்பட்டுள்ளார். இது ஜனநாயகத்துக்கு எதிரானது. எனவே, எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி, அந்த வாக்கெடுப்பு வெற்றிப்பெற்றதாக சபாநாயகர் அறிவித்த முடிவிற்கு தடை விதிக்கவேண்டும். இந்த முடிவினை செல்லாது என்று அறிவித்து ரத்து செய்யவேண்டும். நம்பிக்கை வாக்கெடுப்பின்போது சட்டசபையில் நடந்த நிகழ்வுகளின் வீடியோ பதிவை தாக்கல் செய்ய சட்டசபை செயலாளருக்கு உத்தரவிட வேண்டும். அதுமட்டுமின்றி எந்தவொரு உறுப்பினர்களையும் வெளியேற்றாமல் மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பை ரகசிய வாக்கெடுப்பு மூலம் நடத்தவும், இந்த வாக்கெடுப்பை தமிழக கவர்னரின் செயலாளர், தமிழக தலைமைச் செயலாளர், இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் அதிகாரி ஆகியோர் தலைமையில் கண்காணிப்புக்குழு அமைத்து, அவர்களது மேற்பார்வையில் நடத்தவேண்டும் என உத்தரவிடவேண்டும்."
இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்