விளைநிலங்கள் வழியாக உயர்மின் கோபுரங்கள் அமைக்கக் கூடாது: வைகோ
விவசாய நிலங்களில் நில உரிமையாளர்கள் அனுமதி இல்லாமல் அத்துமீறி உயர்மின் கோபுரங்கள் அமைக்கக் கூடாது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தி உள்ளார்.
விவசாய நிலங்களில் நில உரிமையாளர்கள் அனுமதி இல்லாமல் அத்துமீறி உயர்மின் கோபுரங்கள் அமைக்கக் கூடாது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தி உள்ளார்.
அதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
மத்தி அரசின் பவர் கிரீட் நிறுவனம், தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம் ஆகிய இரு நிறுவனங்கள் இணைந்து கோவை, திருப்பூர், தருமபுரி உள்ளிட்ட தமிழகத்தில் 13 மாவட்டங்களில், விளைநிலங்கள் வழியாக உயர்மின் பாதை அமைக்கும் திட்டங்களைச் செயல்படுத்த முனைந்துள்ளன. விளை நிலங்களில் உயர் அழுத்த மின் கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, டிசம்பர் 17 ஆம் தேதி முதல் விவசாயிகள் 8 மண்டலங்களில் தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து கோவை மாவட்டத்தில் சுல்தான்பேட்டை, திருப்பூர் மாவட்டத்தில் கள்ளிப்பாளையம், ஈரோடு மாவட்டத்தில் மூலக்கரைப் பிரிவு, சேலம் மாவட்டத்தில் சேசன் சாவடி, நாமக்கல் மாவட்டத்தில் படைவீடு, தர்மபுரி மாவட்டத்தில், பென்னாகரம் அருகே எட்டியாம்பட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தில் தென்னரசம்பட்டு ஆகிய இடங்களில் விவசாயிகள் அறவழியில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகம், ஈரோட்டில் செப்டம்பர் 15, 2018 அன்று நடைபெற்ற முப்பெரும்விழா மாநாட்டில் உயர்மின் கோபுரங்களைத் தவிர்த்து புதைவடக் கம்பிகள் வழியாக மின்சாரம் கொண்டு செல்ல வேண்டுமென்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கல்பாக்கத்தில் தற்போது இரண்டு அணு உலைகள் உள்ளன. கூடுதலாக நான்கு அணு உலைகள் கட்டுவதற்கான பணிகள் துவக்கப்பட்டுள்ளன. இதேபோல கூடங்குளத்தில் தற்போது இரண்டு அணு உலைகள் உள்ளன. கூடுதலாக ஆறு அணு உலைகள் கட்டுவதற்கான பணி துவங்கப்பட்டுள்ளது.
மேலும் தூத்துக்குடி, நாகப்பட்டினம், உடன்குடி, செய்யூர், நெய்வேலி, எண்ணூர் மணலி, ஆகிய இடங்களில் அமைய உள்ள அனல்மின் நிலையம் மற்றும் சூரிய ஒளி மின்சக்தி உற்பத்தி நிலையங்களிலிருந்து இந்தியாவின் பிற மாநிலங்களுக்கும், அண்டை நாடுகளான நேபாளம், பங்களாதேஷ் போன்ற நாடுகளுக்கும் மின்சாரம் கொண்டுசெல்லப் படுகிறது. நமது தொப்புள்கொடி உறவான ஒன்றரை லட்சம் ஈழத்தமிழர்களைக் கொன்று குவித்த இலங்கைக்கும் மின்சாரம் கடல்வழியாகக் கொண்டு செல்லப்படுகிறது.
விவசாய நிலங்களில் நில உரிமையாளர்கள் அனுமதி இல்லாமல் அத்துமீறிச் சென்று செயற்கைக்கோள் மூலமாக அளவிட்டு ஆக்கிரமிப்பு செய்கின்றனர். விவசாயிகளிடமிருந்து அரசு நிலத்தை எடுக்கும் நடைமுறைகளை சிறிதும் பின்பற்றுவதில்லை. வேளாண் நிலங்களையே நம்பி இருக்கும் உழவர்களின் எதிர்கால வாழ்வாதாரம் இதன் காரணமாக கேள்விக்குறியாகி உள்ளது. மின்கோபுரம் அமைக்கும்போது விவசாய நிலம் முற்றிலும் மதிப்பிழந்து போகிறது. இழப்பீடு கொடுப்பதிலும் வெளிப்படைத் தன்மை இல்லை.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கோரிக்கைகளை வலியுறுத்தி பொது மக்கள் போராடுகிறபோது தமிழக அரசு காவல்துறை அடக்குமுறை மூலம் முறியடிப்பதில் முனைப்புடன் செயல்படுகிறது. அதே வழியில் கொங்கு மண்டலத்தில் விளைநிலங்கள் வழியாக உயர் மின் கோபுரங்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அறப்போரில் ஈடுபடும் பொது மக்கள், விவசாயிகள் மற்றும் தாய்மார்களையும் காவல்துறையை ஏவி மிரட்டல் விடுப்பது கடும் கண்டனத்திற்கு உரியதாகும்.
தமிழகத்திலிருந்து கேரள மாநிலம் திருச்சூர் வரை மின்சாரம் செல்கிறது. இதில் தமிழகத்தில் உயர்மின் கோபுரங்கள் வழியாகவும் கேரள மாநிலத்தில் புதைவடக் கம்பிகள் வழியாகவும் கொண்டு செல்லப்படுகிறது.
தமிழகக் கடற்கரை ஓரமாக அனல்மின் நிலையம், அணுமின் நிலையம் மூலமாக உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் தமிழகத்தில் உள்ள விவசாய நிலங்களில் மின்கோபுரம் அமைத்து இதர மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதன் காரணமாக தமிழக விவசாய நிலங்கள் மூன்று லட்சம் ஏக்கருக்குமேல் பாதிக்கப்படுகிறது.
தமிழக அரசு, இந்தியாவிலேயே அதிக நீளம் கொண்ட 400 கிலோ வாட் மின்தட பாதை திட்டத்தை சாலை ஓரமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் அமைக்க ஒப்பந்தப்புள்ளி கோரி உள்ளது.
கேரள மாநிலத்தில் உள்ளதைப் போல தமிழகத்திலும் பூமிக்கு அடியில் புதைவடக் கம்பிகள் வழியாக மின்சாரத்தைக் கொண்டு செல்ல வேண்டும்.
உயர்மின் கோபுரங்களால் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர், திண்டுக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர் என 13 மாவட்ட விவசாயம் கடுமையாக பாதிக்கப்படுகிறது. இதனால் பாதிக்கப்படும் விவசாயிகள் உயர்மின் கோபுரம் தவிர்த்து புதைவடக் கம்பிகள் மூலமாக மின்சாரம் கொண்டு செல்ல வேண்டும் என்று ஒற்றைக் கோரிக்கையை வலியுறுத்தி விவசாயிகள் அறப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டிசம்பர் 27-ஆம் தேதி ஈரோடு மூலக்கரையில் ஆயிரக்கணக்கான விவசாயிகளும் பொது மக்களும் மத்திய-மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நடத்தவுள்ள உண்ணாவிரத அறப்போராட்டத்திற்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ஆதரவு தெரிவிக்கிறது.
இப்போராட்டத்தில் கழகத் தோழர்களும் பெருமளவில் கலந்து கொண்டு போராட்டத்தின் வெற்றிக்குத் துணை நிற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். தமிழக அரசு விவசாயிகளின் இந்த நியாயமான கோரிக்கையை அலட்சியப்படுத்தாமல் மாற்று வழியில் உயர் அழுத்த மின்சாரத்தைக் கொண்டு செல்ல வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.