கோயம்பேடு சந்தைக்கு வரும் 27, 28ம் தேதிகளில் விடுமுறை
சென்னை கோயம்பேடு சந்தைக்கு வரும் 27, 28-ம் தேதிகளில் விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி: கிட்டத்தட்ட முழு நாடும் கொரோனா வைரஸின் பிடியில் வந்துள்ளது. இந்தியாவில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 536 ஆக உயர்ந்துள்ளது. 24 மணி நேரத்தில் 69 புதிய வழக்குகள் பதிவாகியுள்ளன. தமிழகத்திலும் 15 பேருக்கு வைரஸ் பரவி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே, கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட 54 வயது நிரம்பிய நபர் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த அந்த நபர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு தமிழகத்தில் முதல் நபர் உயிரிழந்துள்ளார். இதன் மூலம் இந்தியாவில் கொரோனா தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டுக்கு வரும் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நோய் தொற்று பரவுவதை தடுக்கும் வகையில், கோயம்பேடு சந்தையில் மொத்தமாக காய்கறி வாங்க மட்டுமே அனுமதி, சில்லறை வர்த்தகத்திற்கு தடை விதிக்கப்படுவதாக சென்னை மாநகர ஆணையர் நேற்று அறிவித்து இருந்தார். கோயம்பேடு காய்கறி வியாபாரிகள் கூட்டமைப்பு மேற்கூறிய விடுமுறை விடப்படுவதாக அறிவித்துள்ளது.