மத்திய பாஜக அரசின் போக்கை கண்டித்து தஞ்சை மாவட்டத்தில் அனைத்து ஒன்றியத்திலும் மனிதச் சங்கிலி இயக்கம் நடைபெற உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுகுறித்து தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திகுறிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது., குடியுரிமை திருத்தச் சட்டம், குடிமக்கள் தேசிய பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவு ஆகிய மத்திய பாஜக அரசின், இந்திய மக்கள் மீதான மும்முனைத் தாக்குதலைக் கண்டித்தும், மக்களை மத அடிப்படையில் பிரித்து, அனைத்து பகுதி மக்களின் குடியுரிமையை கேள்விக்குறியாக்கும் சட்ட விரோத நடவடிக்கையை எதிர்த்து, ஜன.30 வியாழக்கிழமை மாலை 5 மணி முதல் 6 மணி வரை, தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில், தஞ்சை மாவட்டத்தில் அனைத்து ஒன்றியத்திலும் மனிதச் சங்கிலி இயக்கம் நடைபெற உள்ளது. 


இதில் ஜனநாயக சக்திகள், இஸ்லாமிய அமைப்புகள், அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்க உள்ளனர். இதனை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது. 


பிரதமர் மோடி தலைமையிலான அரசு நாடு முழுவதும் உத்தேச தேசிய குடிமக்கள் பதிவேட்டை (NRC) செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. இதனிடையே திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டம் மற்றும் உத்தேச தேசிய குடிமக்கள் பதிவேட்டு (NRC) தொடர்பாக நாட்டின் பல இடங்களில் போராட்டங்கள் நடைப்பெற்று வருகின்றன. இருப்பினும், தற்போது ​​தேசிய அளவில் உத்தேச தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) போன்ற முறையான எந்த முயற்சியும் தொடங்கப்படவில்லை, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றும் அரசாங்கத்தால் கூறப்படுகிறது. எனினும் வரும் காலத்தில் நிச்சையம் அனைத்து மாநிலங்களிலும் இந்த பதிவேடு செயல்படுத்தப்படும் என கூறப்படுகிறது.


தேசிய அளவில் உத்தேச தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) செயல்படுத்தும் பட்சத்தில் 1971-க்கு முன்னர் அடையாள ஆவணங்களை நாம் முன்வைத்து நமது இந்திய குடியுரிமையினை நிரூபிக்க வேண்டும். இந்த வெட்டு தேதி அசாமுக்கு மட்டுமே. அசாமின் உத்தேச தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) வழக்கு முற்றிலும் வேறுபட்டது. அங்கு பின்பற்றப்பட்ட நடைமுறை அசாம் ஒப்பந்தம் மற்றும் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின் கீழ் இருந்தது. 


நாடுமுழுவதும் பெரும் எதிர்ப்புகளை பெற்றுள்ள இந்த அம்சங்களை எப்படியும் நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்தியாக வேண்டும் என்ற நோக்கத்துடன் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் மத்திய பாஜக அரசின் போக்கை கண்டித்து தஞ்சை மாவட்டத்தில் அனைத்து ஒன்றியத்திலும் மனிதச் சங்கிலி இயக்கம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.