சென்னை: புதுச்சேரி விழுப்புரம் பகுதிகளில் கடலிலும் நிலத்திலும் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு வேதாந்தா நிறுவனத்துக்கு உரிமம் அளிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அதை உடனே ரத்து செய்ய வேண்டும் என மத்திய மாநில அரசுகளை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதுக்குறித்து அக்கட்சியின் நிறுவனர் தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, 


கிழக்குக் கடற்கரைப் பகுதியில் குமரியில் இருந்து காஞ்சிபுரம் வரை கடலிலும் நிலத்திலும் நூற்றுக் கணக்கான எண்ணெய்க் கிணறுகளைத் தோண்டி ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு மத்திய அரசு அவசரம் அவசரமாக உரிமங்களை வழங்கி வருகிறது. டெல்டா மாவட்டங்களில் அம்பானிக்கு அதிக அளவில் உரிமங்கள் வழங்கப் பட்டுள்ளன. 


தற்போது புதுச்சேரி விழுப்புரம் பகுதிகளில் 274 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு வேதாந்தா நிறுவனத்துக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டங்கள் நிறைவேற்றப் பட்டால் ஏற்கனவே நிலத்தடி நீர் குறைந்து தண்ணீர்ப் பற்றாக்குறையில் தவிக்கும் விழுப்புரம் புதுவை பகுதிகளில் குடிநீருக்கும் பஞ்சம் ஏற்படும். இந்தத் திட்டத்துக்கு புதுச்சேரி அரசு அனுமதி வழங்க மாட்டோம் என எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் தமிழக அரசு வாய் மூடி மௌனம் காக்கிறது. ஆட்சியை காப்பாற்றிக் கொள்ளவேண்டும் என்ற சுயநலத்துக்காக தமிழக மக்களின் நலன்களை அடகு வைக்க தமிழக அரசு துணை போவது கண்டனத்துக்குரியதாகும்.


இந்த ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு தடையில்லா சான்றிதழ் வழங்க மாட்டோம் என தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம். இந்த உரிமங்களை ரத்து செய்வதற்கு மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.


தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை ஆரம்பித்து அந்தப் பகுதியையே நாசமாக்கி மக்களின் உயிர்களைக் குடித்து பேரழிவை ஏற்படுத்திய வேதாந்தா நிறுவனம் புதுச்சேரி, விழுப்புரம் பகுதிகளையும் சுடுகாடு ஆக்குவதற்கு மோடி அரசு வழிவகுத்துள்ளது. பாஜகவுக்கு 2014 பொதுத்தேர்தலில் அதிக அளவில் நன்கொடை கொடுத்தது வேதாந்தா நிறுவனம் ஆகும்.


கார்ப்பரேட் கம்பெனிகளின் பினாமியாக செயல்படும் மோடி அரசு அதனால்தான் ஆட்சி முடியப்போகும் நேரத்தில் அவசரமாக வேதாந்தாவுக்கு உரிமங்களை வழங்குகிறது. மோடி அரசின் இந்த மக்கள்விரோத நடவடிக்கைக்கு தமிழக அரசு துணைபோனால் அதற்கான அரசியல் விலையைத் தர நேரிடும் என சுட்டிக்காட்டுகிறோம்.


இவ்வாறு தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.