தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு திட்டத்தை ஜல்லிக்கட்டுக்கென நடந்த ஒரு மெரினா போராட்டத்தை போல் நடத்த திட்டம் என தகவல் கிடைத்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த 1991-ம் ஆண்டு முதல் புதுக்கோட்டையில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டப் பணி மத்திய அரசால் நடந்து வருகிறது. இதன் மூலம் நாட்டுக்கு வருமானம் அதிகரிப்பதோடு, இறக்குமதி செலவும் குறையும். இதற்காக ஏக்கர் கணக்கில் விவசாயிகளிடம் அரசு நிலத்தை குத்தகையாக பெற்றுள்ளது. இத்திட்டத்திற்கான ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்பட்டு விட்டதாகவும் கடந்த 15-ம் தேதி மத்திய அரசு அறிவித்தது. 


இந்நிலையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தமிழகம் முழுவதும் கடுமையான எதிர்ப்பு கிளம்பி வருகிறது. இத்திட்டத்தால் வேளாண் விளைநிலங்களும், விவசாயமும் கடுமையாக பாதிக்கப்படும் என்று கூறி அங்குள்ள மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மக்கள் 13வது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.


நெடுவாசல் அருகிலுள்ள கோட்டைக்காடு கிராமத்திலும் இதேபோன்ற திட்டம் செயல்படுத்தப்படலாம் என்ற அச்சத்தில் அங்குள்ள மக்களும் நேற்று முதல் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இந்த போராட்டத்திற்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வருகிறது.


ஜல்லிக்கட்டு போராட்டம் நடத்திய சில மாணவ அமைப்புகளும் சென்னை, மதுரை, கோவை, புதுச்சேரி, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து புதுக்கோட்டை வந்த வண்ணம் உள்ளனர். இந்த திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதம் இருக்க போகிறோம் என பலர் தெரிவித்துள்ளனர். இதனால் இங்கு கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்திற்குள் நுழையாதவாறு எல்லை பகுதியில் போலீசார் பணியில் ஈடுபட்டுள்ளனர்.