கஜா புயல் பாதிப்புக்கு வருத்தம் தெரிவிக்காததோடு, நிதியும் ஒதுக்காத பிரதமர் மோடி சாடிஸ்டு தான் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் திமுக எம்.எல்.ஏ. கே.எஸ்.மஸ்தான் இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்ட மு.க.ஸ்டாலின் மணமக்களை வாழ்த்தினார். பின்னர் உரையாற்றிய அவர், பிரதமர் மோடியை தனிப்பட்ட முறையில் சாடிஸ்ட் என்று தாம் விமர்சிக்கவில்லை என்று கூறினார்.


தமிழகத்தில் புயல்கள் பாதிக்கும் போது வருத்தம் தெரிவிக்காத பிரதமர் மோடி, குஜராத் உள்ளிட்ட வடமாநிலங்களில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் உடனே வருத்தம் தெரிவிப்பதாக மு.க.ஸ்டாலின் விமர்சித்தார். வெளிநாடுகளில் பாதிப்புகள் ஏற்படும்போது கூட வருத்தம் தெரிவிக்கும் பிரதமர் மோடி, கஜா பாதிப்புக்கு வருத்தம் தெரிவிக்கவில்லை என்று குறிப்பிட்ட மு.க.ஸ்டாலின், கஜா புயல் பாதிப்புக்கு மத்திய அரசு எந்த நிதியும் தரவில்லை என தமிழக அரசு வழக்கறிஞரே நீதிமன்றத்தில் தெரிவித்திருப்பதாகவும் கூறினார்.


காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக தாம் முன்மொழிந்ததை யாரும் தவறு என்று கூறவில்லை என்றும், தமிழகத்தில் மட்டுமல்லாமல், இந்தியாவிலேயே பாஜக வாசனை இருக்கக் கூடாது என்றும் மு.க.ஸ்டாலின் கூறினார். 



தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் 12 பேர் தலையிலும், மார்பிலும் சுடப்பட்டிருப்பது, பிரேத பரிசோதனை அறிக்கையின்மூலம் தெரியவந்திருப்பதாகவும், பின்னால் இருந்து குறிபார்த்து சுடப்பட்டிருப்பதாகவும் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார்.