கமல் அரசியல் பிரவேசத்தை பற்றி முதல்வர் பேட்டி
இன்று மாலை திருப்பூர் மாவட்டம் பல்லடம் கரையாம்புதூரில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடக்க உள்ளது. இதில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்வதற்காக விமானம் மூலம் கோவைக்கு வந்தார்.
பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர்:-
தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடப்படும் என்று ஜெயலலிதா அறிவித்திருந்தார். அவரது எண்ணத்தின் படி நடைபெறும் இந்த அரசு அனைத்து மாவட்டங்களிலும் எம்.ஜி. ஆர். நூற்றாண்டு விழாவை கொண்டாடி அவரது புகழுக்கு பெருமை சேர்த்து வருகிறோம்.
நீட் தேர்வை பொறுத்த வரை மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறோம். தமிழக அமைச்சர்கள் 5 பேர், டெல்லிக்கு சென்று பிரதமர் மோடி, மத்திய மந்திரிகளை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளோம்.
அதிமுகவை பொறுத்தவரை ஒரே அணி தான். ஆறுக்குட்டி எம்.எல்.ஏ. ஓ.பி.எஸ். அணியில் இருந்து விலகியதாக பத்திரிகை, ஊடகங்களில் பார்த்தேன், ஆறுக்குட்டி எம்.எல்.ஏ. மீண்டும் வந்தால் நிச்சயம் ஏற்றுக்கொள்வோம்.
மெட்ரோ ரயில் திட்டம் கோவை மாவட்ட மக்களின் நீண்ட கால கனவு. இந்த மாவட்ட அமைச்சர், எம்.எல்.ஏ.க்கள், மற்றும் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று இந்த திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
டெங்கு காய்ச்சலை தடுக்க போர்க்கால நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. டெங்கு நன்னீரில் தான் பரவுகிறது. இதனால் தண்ணீர் தேங்காமல் இருக்கவும், கொசுக்களை ஒழிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
நடிகர் கமல்ஹாசன் திரைப்பட நடிகர். அரசியலுக்கு வரவில்லை, அவர் அரசியலுக்கு வந்தால் அவரது கருத்துக்களுக்கு பதில் அளிப்போம்.
இவ்வாறு கூறினார்.