மார்ச் 5,6,7 தேதிகளில் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கான மாநாடு நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முதல்வர் பழனிசாமி தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் பங்கேற்கும் இந்த கூட்டம் நடைபெற உள்ளது.


மார்ச் 5ம் தேதி, மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கான ஒருங்கிணைந்த கூட்டம், மார்ச் 6ம் தேதி மாவட்ட ஆட்சியர்களுக்கான கூட்டம் மற்றும் மார்ச் 7ல் காவல்துறை அதிகாரிகளுக்கான கூட்டம் நடைபெறும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.


தமிழகத்தின் 32 மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட ஆட்சியர்கள், ஐபிஎஸ் அதிகாரிகள் பங்கேற்கும் மாநாடு, ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் நடத்தப்படும். மாநாட்டை முதல்வர் தொடங்கி வைப்பார். இறுதி நாள் நிகழ்ச்சியிலும் முதல்வர் பங்கேற்று அறிவுரைகளை வழங்குவார்.


இந்த கூட்டத்தின்போது, மாவட்ட ஆட்சியர்கள் தங்கள் மாவட் டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை முதல்வருக்கு விளக்கிக் கூறுவர். அதேபோல், எஸ்பிக்களும் தங்கள் மாவட்டத்தில் உள்ள சட்டம்- ஒழுங்கு பிரச்சினைகள் குறித்து முதல்வரிடம் விளக்கி கூறி, அறிவுரைகள் பெறுவர். முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாநாடு கடந்த 4 ஆண்டுகளாக நடக்கவில்லை. கடைசியாக 2013ம் ஆண்டில் ஐஏஎஸ், ஐபிஎஎஸ் மாநாடு நடைபெற்றது.


இந்நிலையில், தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் மார்ச் 5 முதல் 3 நாட்களுக்கு காவல்துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்கள் மாநாடு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதல்வர் பழனிசாமி தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.