பழனிசாமி அரசு கோமாவில் உள்ளது என MK ஸ்டாலின் தாக்கு...
முன்கூட்டியே ஆய்வு செய்திருந்தால், முக்கொம்பு மேலணையில் மதகுகள் உடைந்ததை தடுத்திருக்கலாம் என்று திமுக தலைவர் கூறியுள்ளார்.
முன்கூட்டியே ஆய்வு செய்திருந்தால், முக்கொம்பு மேலணையில் மதகுகள் உடைந்ததை தடுத்திருக்கலாம் என்று திமுக தலைவர் கூறியுள்ளார்.
திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றில் 9 மதகுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இதையடுத்து தற்காலிகமாக தடுப்பு அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சேதமடைந்த மதகுகளை, திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் திருச்சி சிவா எம்.பி ஆகியோர் இருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், "முக்கொம்பு அணையை ஆய்வு செய்யாமலேயே அதிகமான அளவில் தண்ணீர் திறக்கப்பட்டதால் தான் மதகு உடைந்துள்ளது. முன் கூட்டியே முக்கொம்பு கதவணையை ஆய்வு செய்து துரிதமாக செயல்பட்டு இருந்தால் இந்த பிரச்னை நிகழ்ந்திருக்காது.
உடைந்த மதகுகள் 4 நாட்களில் சீர் செய்யப்படும் என்று 24 ஆம் தேதி முதல்வர் கூறினார். எடப்பாடி அரசு கோமாவில் உள்ளது. தற்போது 40 சதவீதம் மட்டுமே சீரமைக்கும் பணிகள் நிறைவு பெற்றுள்ளது. அணையில் மதகுகள் உடைந்ததற்கு பொறுப்பேற்று முதல்வர் பதவி விலக வேண்டும். அ.தி.மு.க அரசு கமிஷனை தான் தூர்வாரிக்கொண்டு இருக்கிறது. மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு 40 நாட்கள் ஆகியும் இதுவரை கடைமடை பகுதிக்கு தண்ணீர் சென்றடையவில்லை" என்று கூறினார்.