வருமான வரி அதிகாரி விஜயபாஸ்கரிடம் 4 மணி நேரம் விசாரணை
கடந்த வாரம் சென்னையில் உள்ள சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடு மற்றும் அவரது உறவினர்கள் வீடு, தொழில் நிறுவனங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது.
அதேபோல் சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வீடு, சென்னை சாலிகிராமத்தில் உள்ள எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் கீதாலட்சுமி வீடு, சென்னை சிட்லபாக்கத்தில் உள்ள முன்னாள் எம்.பி. ராஜேந்திரன் வீடு என மொத்தம் 35 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது.
சோதனையில் ரூ.6 கோடி ரொக்க பணமும், பல முக்கிய ஆவணங்களும் சிக்கின. குறிப்பாக, அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் இருந்து வாக்காளர்களுக்கு ரூ.89 கோடி பணம் வழங்கியதற்கான ஆதாரம் நிர்வாகிகள் பட்டியல் உடன் சிக்கியது. அதில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெயர் உள்பட அமைச்சர்கள், கட்சியில் உள்ள மாநில நிர்வாகிகளின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன.
இந்த ஆவணங்களில் 4 பக்கம் கடந்த சனிக்கிழமை சமூக வலைத்தலங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வருமான வரித்துறையினரால் கைப்பற்றப்பட்ட கோடிக்கணக்கான பணம், முக்கிய ஆவணங்கள் அதே துறையில் உள்ள புலனாய்வு பிரிவில் ஒப்படைக்கப்பட்டது. ஆவணங்களை ஆய்வு செய்த புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடத்த முடிவு செய்தனர்.
அதன் அடிப்படையில் நேற்று முன்தினம் அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார், டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் கீதாலட்சுமி, முன்னாள் எம்.பி. சிட்லபாக்கம் ராஜேந்திரன் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
அதன்படி, விளக்கம் அளிப்பதற்காக நேற்று இவர்கள் வந்தனர். ஆனால் இதில் டாக்டர் கீதாலட்சுமி விசாரணைக்கு வரவில்லை. வருமான வரி புலனாய்வு பிரிவு அலுவலக முதல் தளத்தில் துணை இயக்குனர் கார்த்திக் ராஜமாணிக்கம் முன்னிலையில் விசாரணை தொடங்கியது.
ஒரே நேரத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர், சரத்குமார், சிட்லபாக்கம் ராஜேந்திரன் ஆகியோரிடம் தனித்தனி அறையில் வைத்து விசாரணை தொடங்கியது. ஒவ்வொருவரின் வீட்டில் இருந்து எடுக்கப்பட்ட பணம், ஆவணங்கள் குறித்து அவர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டன. அதற்கு அவர்கள் அளித்த பதில்கள், வீடியோ மூலம் பதிவு செய்யப்பட்டன. ஒவ்வொருவரிடமும் 35 கேள்விகள் வரை கிடுக்கிப்பிடியாக கேட்கப்பட்டன.
முதலில் அமைச்சர் விஜயபாஸ்கர் விசாரணை முடிந்து புறப்பட்டார். அவரிடம் 4 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.
விசாரணை முடிந்து வெளியே வந்த அவர் நிருபர்களிடம் கூறும்போது:-
வருமான வரி புலனாய்வு அதிகாரிகள் கேட்ட அத்தனை கேள்விகளுக்கும் நான் பதில் அளித்தேன். அவர்கள் என்னிடம் நடத்திய விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பேன். மீண்டும் விசாரணைக்கு வருமாறு என்னிடம் எதுவும் அவர்கள் தெரிவிக்கவில்லை என்றார்.
அவரைத்தொடர்ந்து முன்னாள் எம்.பி. சிட்லபாக்கம் ராஜேந்திரன் விசாரணை முடிந்து புறப்பட்டார். ஆனால் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கவில்லை. அவரைத்தொடர்ந்து சரத்குமாரும் விசாரணை முடிந்து வெளியே வந்தார்.
நேற்று ஆஜரான அமைச்சர் விஜயபாஸ்கர், சரத்குமார், சிட்லபாக்கம் ராஜேந்திரன் ஆகிய 3 பேரிடமும் இன்னும் விசாரணை முடியவில்லை. மீண்டும் அவர்களை அழைத்து விசாரணை நடத்த வருமான வரி புலனாய்வு பிரிவு அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.